சென்னை: “திமுக ஆட்சியில் 24 பேர் போலீஸ் காவலில் உயிரிழந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரின் குடும்பத்தாரிடமும் ‘சாரி’ சொல்லுங்கள். அவர்கள் அனைவரின் குடும்பத்துக்கும் நிதியுதவி வழங்குங்கள். அண்ணா பல்கலை மாணவி வழக்கு முதல் அஜித்குமார் வழக்கு வரை எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கிறது. நீதிமன்றம்தான் கேள்விகேட்க வேண்டும் என்றால், நீங்க எதுக்கு சார்?” என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸார் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரடியாக சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதி உதவி வழங்கினார்.