மும்பை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.
இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23-ந்தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. முன்னதாக பிப். 20-ந்தேதி வங்காளதேசத்தையும், மார்ச் 2-ந்தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யலாம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அது போன்ற சூழ்நிலையில் சாம்சனுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர் தென் ஆப்பிரிக்காவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட்டும் ஆஸ்திரேலியாவில் நன்றாக விளையாடினார். ஆனால் அது மிகவும் நீண்ட சுற்றுப்பயணம். எனவே அவருக்கு ஓய்வு கொடுப்பது பெரிய விஷயமாக இருக்காது" என்று கூறினார்.