சாம்பியன்ஸ் டிராபி: பும்ராவின் நிலை குறித்து ரோகித் சர்மா விளக்கம்

3 hours ago 1

நாக்பூர்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இந்த தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பிடித்திருந்தாலும், அவர் இந்த தொடரில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 5-வது போட்டியின்போது முதுகு பகுதியில் பும்ரா காயம் அடைந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்த அவர் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பும்ராவின் காயத்தைப் பற்றிய மருத்துவர்கள் அறிக்கைக்கு காத்திருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அதைப் பொறுத்து பும்ரா விளையாடுவார் என்றும் ரோகித் சர்மா கூறியுள்ளார். 

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஜஸ்பிரித் பும்ரா விஷயத்தில் மருத்துவர்கள் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். அது தெரிய வந்ததும் அவருடைய விஷயத்தில் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது பற்றிய தெளிவான முடிவு கிடைக்கும்" என்று கூறினார்.

Read Entire Article