சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நிச்சயம் அவர்கள் அசத்துவார்கள் - கங்குலி ஆதரவு

1 week ago 4

மும்பை,

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த தொடரில் முன்னணி வீரர்களான ரோகித் மற்றும் விராட் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் கெரியரின் இறுதி கட்டத்தில் இருக்கும் இருவரும் சமீப காலமாக பார்மின்றி தவித்து வருகின்றனர். இதனால் இந்த தொடரில் எழுச்சி பெற்று கோப்பையை வென்று கொடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் அவர்களின் சுமாரான பேட்டிங் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இருவரும் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் விராட் கோலியும் ரோகித் சர்மாவும் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று முன்னாள் கேப்டன் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோகித் சர்மா பெரிய வீரர்கள். சாம்பியன்ஸ் டிராபியில் குறிப்பாக துபாயில் பிட்ச்கள் நன்றாக இருக்கும் என்று நாம் நம்பலாம். கடந்த சில வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளில் அவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளார்கள். எனவே விராட் கோலி, ரோகித் சர்மா நிச்சயம் நன்றாக செயல்படுவார்கள்.

அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரிலும் அவர்கள் நன்றாக விளையாடுவார்கள். ஆஸ்திரேலியாவில் வேண்டுமானால் அவர்கள் நன்றாக விளையாடாமல் இருந்திருக்கலாம். ஆனால் அடுத்து வரும் தொடர்களில் அவர்கள் நன்றாக விளையாடுவார்கள். இந்தியா கடந்த டி20 உலகக்கோப்பையை வென்றது. ஒருநாள் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்றது.

எனவே சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் ஒரு அணியாக இந்தியா இருக்கும். இருப்பினும் அதற்கு இந்தியா தங்களுடைய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பது முக்கியம். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் நல்ல அணி" என்று கூறினார்.

Read Entire Article