மும்பை,
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்கான அணிகளை ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் அறிவித்து வருகின்றன.
ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ. மட்டும் இந்திய அணியை அறிவிக்க கூடுதல் அவகாசத்தை கேட்டு ஐ.சி.சி.-யிடம் முறையிட்டது. இதன் காரணமாக இந்திய அணி வரும் 18 - 19 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதற்கு முன்னதாக பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது 15 பேர் கொண்ட உத்தேச அணியை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தான் தேர்வு செய்த இந்திய அணியை அறிவித்துள்ளார்.
அந்த அணியில் முன்னணி வீரர்களான ஜடேஜா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு இடமளிக்காத அவர், திலக் வர்மாவை சேர்த்துள்ளார்.
ஹர்பஜன் தேர்வு செய்த அணி விவரம் பின்வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிஷப் பண்ட் அல்லது சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், நிதிஷ் ரெட்டி, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா, சிராஜ், சஹால்.