லாகூர்,
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் வரும் 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த தொடருக்கான அணிகளை அனைத்து கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து விட்டன. அதில் கடைசியாக பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. முகமது ரிஸ்வான் தலைமையிலான அந்த அணியில் பாபர் அசாம், ஹரிஸ் ரவுப், ஷாகீன் அப்ரிடி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால் இந்த அணியில் பஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா சேர்க்கப்பட்டுள்ளது அந்நாட்டின் முன்னாள் வீரர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணி தேர்வு சரியில்லை என்று அந்நாட்டின் முன்னாள் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்த அணியில் பஹீம் அஷ்ரப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது பேட்டிங் சராசரி 8 ஆகவும், பந்துவீச்சு சராசரி 100 ஆகவும் உள்ளது. இது தவிர, குஷ்தில் ஷாவின் செயல்திறனும் சிறப்பாக இல்லை. நாங்கள் ஒரு சுழற்பந்து வீச்சாளரை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளோம், ஆனால் இந்தியா 4 சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. அந்த வகையில் எங்களது அணி தேர்வு சரியில்லை" என்று அவர் கூறினார்
பாகிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு:
முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அசாம், பகர் ஜமான், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தயாப் தாஹிர், பஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவுப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா மற்றும் ஷாகீன் அப்ரிடி.