
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 63 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் - ரோகித் சர்மா களமிறங்கினர். இதில் கில் நிதானமாக விளையாட ரோகித் சர்மா அதிரடியில் பட்டையை கிளப்பினார். முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த ஜோடி அசத்தியது. கில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா 76 ரன்களில் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த 2-வது வீரர் என்ற சனத் ஜெயசூர்யாவின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள ரோகித் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. சவுரவ் கங்குலி - 117 ரன்கள்
2. ரோகித் சர்மா - 76 ரன்கள்
3. சனத் ஜெயசூர்யா - 74 ரன்கள்
4. ஹான்சி குரோன்ஜே - 61 ரன்கள்