
லண்டன்,
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. 19-ந்தேதி கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
முன்னதாக இந்த தொடரிலிருந்து நட்சத்திர பவுலரான பும்ரா காயம் காரணமாக விலகியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் நல்ல பார்மில் இருக்கிறார். டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு அவர் தொடர்நாயகன் விருது வென்று முக்கியப் பங்காற்றியதை மறக்க முடியாது. அப்படிப்பட்ட அவர் விலகியுள்ளதால் சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்று பல தரப்பினர் கூறி வருகின்றனர்.
அதே சமயம் அர்ஷ்தீப் சிங், ஷமி போன்ற மற்ற பவுலர்களை வைத்து கோப்பையை வெல்ல முடியும் என்று பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்த ஷமி சிறப்பாக செயல்படுவார் என்றும் அவருடன் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா இனைந்து அணியின் வெற்றிகளில் பங்காற்றுவார்கள் என்றும் கூறினார்.
இந்நிலையில் அர்ஷ்தீப் சிங் அசத்துவதற்கு சாம்பியன்ஸ் டிராபி ஒன்னும் டி20 தொடர் அல்ல என இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நீங்கள் ஜஸ்பிரித் பும்ராவை மிஸ் செய்வீர்கள். உலகின் மிகச்சிறந்த பவுலர் உங்களுக்காக விளையாடப் போவதில்லை என்ற நிதர்சனத்தில் இருந்து உங்களால் நகர முடியாது. அவர் விளையாடாதது உங்களுக்கு பிரச்சனையைக் கொடுக்கும். நீங்கள் எதிரணியாக இருந்து அர்ஷ்தீப் சிங்கை சோதியுங்கள்.
கொண்டாட்டம் சிறிது நேரத்தில் முடிய இது ஒன்றும் டி20 கிடையாது. ஒருநாள் கிரிக்கெட்டில் நீங்கள் மீண்டும் மீண்டும் வந்து பவுலிங் செய்ய வேண்டும். அந்த விஷயத்தை அவர் அதிகமாக செய்து பழக்கமில்லை. எனவே அதைப் பயன்படுத்தி நீங்கள் அவரை அடித்து நொறுக்க முயற்சிக்க வேண்டும். அப்போது அவர் என்ன செய்கிறார் என்பதை பார்க்கலாம்" என கூறினார்.