சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்க துபாய் சென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

1 week ago 4

துபாய்: 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இவை தலா 4 என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகிறது. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

பாகிஸ்தானின் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி உள்ளிட்ட மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது. இந்தியா பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கு செல்ல மறுத்ததால், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. வரும் 19ம் தேதி கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா வரும் 20ம் தேதி தனது முதல் போட்டியில் வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து 23ம் தேதி பரம எதிரி பாகிஸ்தானை சந்திக்க உள்ளது. கடைசி லீக் போட்டியில் மார்ச் 2ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்க கேப்டன் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணியினர் நேற்று மாலை மும்பையில் இருந்து துபாய் புறப்பட்டுச்சென்றனர். துபாய் விமான நிலையத்தில் இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தேசிய கொடிகளை அசைத்து ரசிகர்கள் வரவேற்றனர். நாளை முதல் இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர். பயிற்சி போட்டியில் எதுவும் ஆடாத இந்தியா நேரடியாக வங்கதேசத்துடன் முதல் போட்டியில் விளையாடுகிறது.

இந்திய அணிக்கு கபில்தேவ் அறிவுரை;
சாம்பியன் டிராபி தொடரில் இருந்து முதுகு பகுதியில் வீக்கம் காரணமாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகி உள்ளார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இந்நிலையில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்துள்ள பேட்டியில், ஒரு அணியின் செயல்பாடு என்பது ஒரு வீரரை மட்டுமே சார்ந்து இருப்பதில்லை. பும்ரா உடற்தகுதியுடன் இல்லை என்பது நல்ல செய்தி இல்லை தான். ஆனால் நமது அணி அங்கே விளையாட போகிறது.
இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். வெற்றியோ தோல்வியோ அதைப்பற்றி சிந்திக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவை வீழ்த்துவதே இலக்கு;
சாம்பியன் டிராபி தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது இந்தியா-பாகிஸ்தான் போட்டி தான். இந்த போட்டி துபாயில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் துணை கேப்டன் சல்மான் ஆகா கூறியதாவது: ”பாகிஸ்தான்-இந்தியா போட்டி மிகப்பெரியது, ஆனால் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மிகவும் முக்கியமானது. நாம் இந்தியாவை தோற்கடித்து போட்டியை வெல்லவில்லை என்றால், அந்த வெற்றிக்கு எந்த மதிப்பும் இல்லை. இருப்பினும், இந்தியாவிடம் தோற்று கோப்பையை வென்றால், அது பெரிய சாதனை. இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு. சாம்பியன்ஸ் டிராபிக்காக நான் உற்சாகமாக இருக்கிறேன், பாகிஸ்தான் ஐசிசி தொடரை நடத்துவது சிறப்பு. எனது பூர்வீகமான லாகூரில் கோப்பையை வெல்லவேண்டும் என்பது எனது கனவு. பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது,” என்றார். கடைசியாக 2017ல் நடந்த சாம்பியன் டிராபியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

The post சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்க துபாய் சென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article