சாம்சங் தொழிற்சாலையில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தை பதிவு செய்வதில் என்ன சிக்கல்? : அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

4 months ago 23

சென்னை : சாம்சங் தொழிற்சாலையில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தை பதிவு செய்வதில் என்ன சிக்கல்? என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “சாம்சங் ஊழியர்கள் பிரச்சனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருகிறார். தொழிற்சங்க நிர்வாகிகள் யாரையும் வீடு தேடிச்சென்று கைது செய்யவில்லை. திமுக அரசு ஒருபோதும் வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளாது .அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால் காவல்துறை கைது செய்து பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது. அதே போலதான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்து விடுவிக்கப்பட்டனர். யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை.சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கத்தை பதிவு செய்வதில் தொழிலாளர் நலத்துறைக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை அரசு அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை. அப்பகுதியில் இயங்கும் பல தொழிற்சாலைகளில் இந்த சங்கத்தை அரசு அங்கீகரித்துள்ளது.சாம்சங் நிறுவனம், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அரசு முடிவெடுக்க முடியவில்லை. உத்தரவு எப்படி வந்தாலும் அரசு அதனை செயல்படுத்தும்.பல கோரிக்கைகளை ஏற்க நிறுவனம் முன்வந்துள்ளதால், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும்.தொழில் நடத்த உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.சாம்சங் தொழிற்சாலை வேறு மாநிலத்துக்கு செல்லவில்லை.சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு நடத்தும் போராட்டத்தை நாங்கள் அரசியலாக பார்க்கவில்லை. ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரத்தில் பல தொழிற்சாலைகளில் சிஐடியு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாம்சங் ஊழியர்கள் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் அரசு உறுதியாக உள்ளது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சாம்சங் தொழிற்சாலையில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தை பதிவு செய்வதில் என்ன சிக்கல்? : அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article