சென்னை: சாம்சங் ஊழியர்கள் போராட்டம் அமைசசர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா கூறினர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏ.சி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 1500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு சங்கம் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் கடந்த மாதம் 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த போராட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தலைமையில் தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே 5வது முறையாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் நேற்று மீண்டும் இருங்காடுகோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அலுவலகத்தில், பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் சண்முகம், டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் 2025ம் ஆண்டு வரை ரூ 5 ஆயிரம் ஊக்க தொகை மற்றும் பணியின் போது உயிரிழந்த தொழிலாளார் குடும்பத்திற்கு நிர்வாகம் சார்பில் ரூ 1 லட்சம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு உடன்பாடுகள் எட்டபட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நிர்வாகம் 14 கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் இறந்தால் உடனடியாக ரூ.1 லட்சம் தருவதாக கூறியுள்ளனர். இந்த மாதமே சம்பளம் ரூ.5000 உயர்த்தி தருவதாக கூறியுள்ளனர். அதைப்போல் 14 கோரிக்கைகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிஐடியு தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது’’ என்று தெரிவித்தனர்.
The post சாம்சங் ஊழியர்கள் போராட்டம் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு appeared first on Dinakaran.