சாமியார் பேசிய வீடியோவை வெளியிட்ட இணைய செய்தி நிறுவன நிர்வாகி மீது வழக்கு: உத்தரபிரதேச போலீஸ் நடவடிக்கை

3 months ago 19

காஜியாபாத்: வலதுசாரி அமைப்புகளின் போலிச் செய்திகளை அம்பலப்படுத்திய இணைய செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனர் மீது உ.பி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த சாமியார் யதி நரசிம்மானந்தின் கருத்துகள், இரு சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தும்படியும், வெறுப்பை பரப்பும் வகையில் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக போலி செய்திகளை சமூக வலைதளங்கள் மூலம் அம்பலப்படுத்தி வரும் ஏஎல்டி நியூஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் என்பவர், சாமியார் யதி நரசிம்மானந்த் தொடர்பான வீடியோவை வெளியிட்டார். ஆனால் அந்த வீடியோ யதி நரசிம்மானந்த் பேசியதை எடிட் செய்து வெளியிட்டதாக உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் உள்ளூர் பாஜக தலைவர் உதிதா தியாகி என்பவர், காஜியாபாத்தின் வெப் சிட்டி காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் முகமது ஜுபைருக்கு எதிராக 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் இவருடன் சேர்ந்து அந்த வீடியோவை பகிர்ந்த ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி மற்றும் முஸ்லிம் மதகுரு அர்ஷத் மத்னி ஆகியோர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக உத்தரபிரதேச காவல்துறை முகமது ஜுபைர் மீது இதேபோன்ற வழக்குஒன்றை பதிவு செய்தது. அந்த வழக்கில் முகமது ஜுபைரை போலீசார் கைது செய்தனர். ஆனால் உத்தரபிரதேச காவல்துறையின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்பதைக் கண்டறிந்த உச்ச நீதிமன்றம், அவரை விடுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சாமியார் பேசிய வீடியோவை வெளியிட்ட இணைய செய்தி நிறுவன நிர்வாகி மீது வழக்கு: உத்தரபிரதேச போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article