சாப்பாடு வாங்கி கொடுப்பதாக அழைத்து சென்று 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்

5 days ago 3

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தாலுகா கட்டமாதங்கலா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்லகிரி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அதேப்பகுதியில் 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்த நிலையில் மூதாட்டி அந்தப்பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆனந்திடம் மூதாட்டி சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது தன்னுடன் வந்தால் ஓட்டலில் சாப்பாடு வாங்கி தருவதாக ஆனந்த் கூறி உள்ளார். இதற்கு சம்மதித்து ஆனந்துடன் மூதாட்டி சென்றுள்ளார். ஆனால் ஆனந்த் மூதாட்டியை ஓட்டலுக்கு அழைத்து செல்லாமல், அங்குள்ள தோட்டத்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து மூதாட்டி என்று கூட பாராமல் ஆனந்த், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, கத்தி கூச்சலிட்டுள்ளார்.

அப்போது மூதாட்டியின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்து தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்தனர். இதனை அறிந்த ஆனந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அங்கு வந்தவர்களிடம் மூதாட்டி, ஆனந்த் சாப்பாடு வாங்கி தருவதாக தோட்டத்து வீட்டுக்கு அழைத்து வந்து தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கட்டமாதங்கலா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆனந்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article