சாத்தூர், நவ.15: சாத்தூர் அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதை மற்றும் மது ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சாத்தூர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கமல் மற்றும் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்செல்வி பங்கேற்று, பள்ளி மாணவ, மாணவிகளிடையே போதைப்பொருட்கள் மற்றும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். பின்னர் காவல் துணைக் கண்காணிப்பாளர் நாகராஜ் பேசும்போது, மாணவர்கள் போதைப் பழக்கங்களுக்கு உள்ளாகும் சூழ்நிலை குறித்தும், அதனை தவிர்த்து விடுபடுவது குறித்தும் எடுத்துக் கூறினார்.
மேலும் நம்மைச்சுற்றி நடக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு, கெட்ட விஷயங்களை கண்டும் காணாமல் இருந்து விட வேண்டும். எந்த நிலையிலும் போதைப் பொருட்கள் புத்திசாலித்தனத்தையும், அறிவாற்றலையும் வளர்க்காது. சிறிது சிறிதாக பழக்கத்திற்கு ஆளாகும் நபர்களை இழிவான நிலைக்கு தள்ளிவிடும். கடுமையான உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்து விரைவில் உயிரிழக்க நேரிடும் என்று தெரிவித்தார். மாணவர்களுக்கு போதை பழக்கங்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் கமல்காமராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post சாத்தூர் அரசு உயர்நிலை பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.