சாத்தான்குளம், அக். 22: சாத்தான்குளத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் நேற்று காலவரையற்ற ஸ்டிரைக்கை தொடங்கினர் இதனால் சங்க பரிவர்த்தனை நடைபெறவில்லை. ரேஷன் கடை, இ-சேவை மையம் மூடப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர்களிடம் அபராத தொகை என இரு மடங்கு வசூலிக்கப்படும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்கள் அதிகமாக இறக்கி விற்பனை செய்ய குறியீடு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடை விற்பனையாளர்களை சொந்த மாவட்டத்திலும் குறைந்தது 10 கி.மீ தூரத்திற்கு அவர்களுடைய குடும்பம் உள்ள ஒன்றியத்திலேயே மாற்றித்தர அரசு ஆணையிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள 7 கூட்டுறவு கடன் சங்கத்தில் 23 பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை நிறுத்தப்பட்டது. மேலும் 35 ரேஷன் கடைகள் மூடப்பட்டன. சங்கத்தைச் சேர்ந்த இ-சேவை மையங்களும் செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பண பரிவர்த்தனை நடைபெறாததால் கூட்டுறவு சங்கம் வெறிச்சோடி காணப்பட்டது.
The post சாத்தான்குளத்தில் கூட்டுறவு ஊழியர்கள் ஸ்டிரைக் appeared first on Dinakaran.