சாத்தனூர் அணையில் இருந்து 13 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றம் * தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு * கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை

1 month ago 3

திருவண்ணாமலை, டிச.13: திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலான மழை பெய்து வருகிறது. அதனால், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிகபட்சமாக வந்தவாசியில் 39 மிமீ மழை பதிவானது. செங்கத்தில் 6.8 மிமீ, ஜமுனாமரத்தூரில் 10 மிமீ, திருவண்ணாமலையில் 10 மிமீ, தண்டராம்பட்டில் 25.6 மிமீ, கலசபாக்கத்தில் 23 மிமீ, கீழ்பென்னாத்தூரில் 31 மிமீ, ஆரணியில் 23 மிமீ, போளூரில் 12.6 மி.மீ செய்யாறு 30 மி.மீ, வெம்பாக்கத்தில் 27 மிமீ, சேத்துப்பட்டு 36 மிமீ மழை பதிவானது.

கடந்த 30ம் தேதி மற்றும் 1ம் தேதிகளில் பெஞ்சல் புயல் மழையால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள், அணைகள் நிரம்பியுள்ளன. அதன்தொடர்ச்சியாக, நேற்று முதல் பெய்துவரும் மழையால், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 8000 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 119 அடியில், தற்போது 116.75 அடி நிரம்பியுள்ளது. அணையின் நீர் கொள்ளளவு மொத்தமுள்ள 7,321 மில்லியன் கன அடியில் தற்போது 6,821 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது.

எனவே, அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி உபரி நீர் தென்பெண்ணையாற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. அதனால், தென்பெண்ணை ஆற்றில் இரு கரையும் தொட்டபடி மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள கெளமஞ்சனூர், புத்தூர்செக்கடி, திருவடத்தனூர், ராயண்டபுரம், தொண்டமானூர், அகரம்பள்ளிப்பட்டு, சதாகுப்பம் போன்ற கிராமங்களுக்கும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை ஊழியர்கள் சாத்தனூர் அணைக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது என்பதை சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். மேலும், மழை தொடரும் வாய்ப்பு இருப்பதால், தென்பெண்ணையில் மேலும் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், செண்பகத் தோப்பு அணை, குப்பநத்தம் அணை, மிருகண்டா அணை ஆகியவையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே, அணைகளில் இருந்து பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால், செய்யாற்றிலும் கமண்டலநாக நதியிலும் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

The post சாத்தனூர் அணையில் இருந்து 13 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றம் * தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு * கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை appeared first on Dinakaran.

Read Entire Article