சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல்: ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு

3 hours ago 3

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டுமென்றால், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது அவசியம் என்ற நிலை இருந்தபோதிலும், இதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருந்த நிலையிலும், இதன் அடிப்படையில் கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையிலும், இதனை நிறைவேற்ற தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, சாதிவாரி கணக்கெடுப்பினை மத்திய அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தி.மு.க. அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதனைக் கண்டித்து நான் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் விடுத்தனர்.

இந்தச் சூழ்நிலையில், நேற்று பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக வெளி வந்துள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவினை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் மனதார வரவேற்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article