இந்தியாவில் பழங்குடியினர் பட்டியலில் 37 பிரிவுகள் உள்ளன. இதில் 9-வது பிரிவில் இடம்பெற்றுள்ளது ‘காட்டுநாயக்கன்’ சமூகம். இவர்களது கலாச்சார முறைகள், சமகாலத்தில் இருந்து மாறுப்பட்டது. எழுத்து வடிவம் இல்லாத மொழியை பேசுகின்றனர். கடவுள் வழிபாட்டிலும் உருவ வழிபாடு கிடையாது. வேப்ப மரத்தின் கீழே 3 கற்களை நட்டு வழிபடுகின்றனர். குலதெய்வமாக காட்டுமுனீஸ்வரர் மற்றும் பெரியாயி ஆகியோரை வணங்கி வருகின்றனர்.
குலத்தொழிலாக சிறு விலங்குகளை வேட்டையாடுதல், மூலிகை வைத்தியம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். காட்டுநாயக்கன் சமூகத்தின் திருமண சடங்கு என்பது, அவர்களது மரபு வழியே இன்றளவும் நடத்தப்படுகிறது. காரணவர்கள் (மூத்தவர்கள்) முன்பு நடுவீட்டில் பொட்டு தாலி கட்டும் வழக்கத்தை பின்பற்றுகின்றனர்.