சாதி ஒழிப்பு அரசியலை அல்லவா விஜய் முன்மொழிந்திருக்க வேண்டும்: சிந்தனை செல்வன்

2 months ago 11

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த மாநாட்டில் பேசிய விஜய் பெரியார் எங்கள் கொள்கை தலைவர். பெரியார் கூறிய கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்க போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை என்றும் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை என்று கூறினார்.

தொடர்ந்து பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர். நேர்மையான நிர்வாக செயல்பாட்டிற்கு வழி வகுத்தவர், அவரை எங்களுக்கு வழிகாட்டியாக ஏற்கிறோம். அம்பேத்கர் பெயரை கேட்டாலே சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவோர் நடுங்குவார்கள், அவரும் எங்கள் கொள்கை வழிகாட்டி. வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் அவர்களையும் எங்கள் வழிக்காட்டியாக ஏற்கிறோம் என்று விஜய் கூறினார்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் பேச்சு குறித்து விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் உயரிய குறள் நெறியை தனது கட்சியின் உயிர் கொள்கையாய் உயர்த்திப்பிடித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் சகோதரர் விஜய் அதை நடைமுறைப்படுத்திட 'சாதி ஒழிப்பு அரசியலை' அல்லவா முன்மொழிந்திருக்க வேண்டும்.

மாறாக வெறும் தீண்டாமை ஒழிப்பு குறித்து மட்டும் மேலோட்டமாக பேசுவது அப்பட்டமான சமரச அரசியல் அல்லவா?. பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு கற்பிக்கும் சாதிய மலத்தை அகற்றாமல் நாற்றமென வெளிப்படும் தீண்டாமையை மட்டும் ஒழிப்பதாக சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகாதா?. அம்பேத்கரை கண்டு சனாதன கும்பல் அச்சப்படுவதற்கு காரணம் அவர் சாதி ஒழிப்பை முன்வைத்ததால்தான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article