மகாகும்ப்நகர்: உபி மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. கும்பமேளா தொடங்கியதிலிருந்து, நடிகர்கள், மாடல்கள் மற்றும் விஐபிக்கள் பலர் கும்பமேளாவை காண வந்துள்ளனர். பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் பிரயாக்ராஜில் புனித நீராடியுள்ளனர்.
கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மவுனி அமாவாசையன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில், பந்துவா காலா உதாசின் துறவிகள் பிரிவு தலைவர் மகாந்த் தர்மேந்திர தாஸ் கூறுகையில்‘‘ கும்பமேளாவுக்கு வந்த மாடலாக இருந்து ஆன்மிகவாதியாக மாறிய சாத்வி ஹர்ஷா ரிச்சாரியா, ருத்ராட்சம்,பாசி மணி விற்பனையாளர் மோனாலிசா, ஐஐடி பாபா அபய் சிங் மற்றும் இந்தி நடிகை மம்தா குல்கர்னி போன்றவர்கள் தொடர்பான ஏராளமான செய்திகள் வெளியாகியுள்ளன.
ஊடகங்கள் துறவிகளுக்கு சேவை செய்வதற்கு பதிலாக அத்தகையவர்களை ஊக்குவிப்பதாக இருந்தால் தவறு ஊடகங்கள் மீது என்று சொல்வேன். பல பக்தர்கள் திறந்தவெளியில் இரவை கழிக்கவும், கங்கையில் புனித நீராடவும் சங்கமத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து அவர்கள் கவலைப்படுவது இல்லை. கும்பமேளா என்பது 5 நட்சத்திர கலாசாரத்திற்கானது அல்ல,உண்மையான பக்தர்கள் கவர்ச்சி, ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அடிக்கடி மகா கும்பமேளாவிற்கு வருகை தந்து ஏற்பாடுகளை கண்காணித்தார். ஆனால் அதிகாரிகள் விஐபி நடமாட்டத்தில் அதிக மும்முரமாக இருந்தனர். சாதாரண பக்தர்களைக் கவனிக்க நேரமில்லாமல் போனது. அதிகாரிகள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சிறப்பு வசதிகளை வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர்’’ என்றார்.
மம்தா குல்கர்னிக்கு கின்னார் அகாரா ‘மகாமண்டலேஷ்வர்’ பட்டம் வழங்கியது குறித்து கேட்டபோது,‘‘ ஒருவர் சிறந்த அறிஞராக இருந்து அவரது சேவை பாராட்டத்தக்கதாக இருந்தால், அவர் மகா மண்டலேஷ்வர் ஆக்கப்படுகிறார். மண்டலேஷ்வர் என்ற பட்டம் தற்காலிகமானது. யாராவது ஏதாவது தவறு செய்தால், அதைத் திரும்பப் பெற அகாராவுக்கு உரிமை உண்டு’’ என்றார். மம்தா குல்கர்னிக்கு வழங்கப்பட்ட மகா மண்டலேஷ்வர் பட்டத்தை கின்னார் அகாரா திரும்ப பெற்றது.
The post சாதாரண பக்தர்களைக் கவனிக்க அதிகாரிகளுக்கு நேரமில்லை விஐபிக்களுக்கு கும்பமேளாவில் முக்கியத்துவம்: துறவிகள் தலைவர் தர்மேந்திர தாஸ் பேட்டி appeared first on Dinakaran.