சென்னை: சாகச சுற்றுலாவை ஊக்கப்படுத்துவதற்காக பூண்டி, கொல்லிமலை, ஜவ்வாது மலை உள்ளிட்ட 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இயற்கையை சார்ந்த இடங்களும், கோயில்களும், கடல்களும் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த இடங்களை பார்ப்பதற்காக இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகள் தமிழகம் வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் சாகச சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் தமிழக சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் சாகச சுற்றுலாவை அமைப்பதற்காக 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம், நாமக்கல்லில் உள்ள கொல்லிமலை, திருப்பத்தூரில் உள்ள ஏலகிரி, கரூரில் உள்ள பொன்னனியாறு அணை, தருமபுரியில் உள்ள வத்தல்மலை, திருவண்ணாமலையில் உள்ள ஜவ்வாது மலை மற்றும் தென்காசியில் உள்ள குண்டாறு ஆகிய இடங்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இளம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு சாகச சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பூண்டி நீர்த்தேக்கம், கொல்லிமலை, ஏலகிரி, பொன்னனியாறு, வத்தல்மலை, ஜவ்வாது மலை, குண்டாறு ஆகிய இடங்கள் சாகச சுற்றுலாவை அமைப்பதற்கான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற வகையில் உயர்தர வசதிகள், சாகச மற்றும் இயற்கை எழிலை காணும் வகையில் சுற்றுச்சூழல் முகாம் உள்ளட்டவை இந்த திட்டம் மூலம் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் அதிகம் அறியப்படாத இந்த பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாகும். விருந்தோம்பல், உணவுச் சேவைகள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் போன்றவற்றில் உள்ளூர் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் பொருளாதாரம் வலுப்படும்.
இந்த 7 இடங்களிலும் சாகச சுற்றுலா மையம் 3 முதல் 8 ஏக்கரில் அமைக்கப்படும். ஒவ்வொரு இடத்திலும் நிலையான பிரீமியம் மற்றும் சொகுசு கூடாரங்கள், மர வீடுகள் அமைக்கப்படும். அதேபோல் தொகும் பாலம், ஜிப்லைன், டிராம்போலைன், லோ-ரோப், மலையேற்றம், பாறை ஏறுதல், சைக்கிள் ஓட்டுதல், சவாரி பைக்குகள் போன்றவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மீன்பிடித்தல், படகு சவாரி, ஜெட்ஸ்கை சவாரிகள், நீர் பனிச்சறுக்கு, கயாக்கிங் போன்றவை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகு சுற்றுலாவை நிறுவதற்கான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post சாகச சுற்றுலாவை ஊக்கப்படுத்த பூண்டி, கொல்லிமலை, ஜவ்வாது மலை உள்ளிட்ட 7 இடங்கள் தேர்வு: சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.