
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னையில் வீடு உள்ளது. இவர் தனது யூடியூப் பக்கத்தில் அரசியல் விமர்சன வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். முன்னதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இவருக்கு எதிராக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் சவுக்கு சங்கரை போலீசார் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, ஜாமீன் பெற்று சவுக்கு சங்கர் வெளியே வந்தார். எனினும், தொடர்ச்சியாக யூடியூபில் சவுக்கு சங்கர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி சவுக்கு சங்கர் வீட்டின் மீது இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்மநபர்கள் சிலர், தூய்மைப் பணியாளரை அவதூறாகப் பேசியதாக கண்டனம் தெரிவித்து கழிவு நீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியதாகச் சொல்லப்படுகிறது. அவரது வீட்டையும் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றிய விவகாரத்தில் பதிவான விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கரின் தாயார் கமலா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே சவுக்கு சங்கர், காவல் ஆணையரகத்தை குற்றம்சாட்டியிருந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.