கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமங்களான ஆற்றாங்கரை, தங்கச்சிமடம், மண்டபம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, புதுமடம் உள்பட பல்வேறு கிராமங்களில் வெற்றிலை பயிரிடுதல் முக்கிய தொழிலாக இருந்தது. இப்பகுதிகளில் விளையும் வெற்றிலை ருசி மிகுந்ததால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இதனால் மொத்த வியாபாரிகள் ஆர்வத்துடன் இங்கு வந்து வெற்றிலை வாங்கி சென்றனர்.
வெற்றிலை விவசாயிகளுக்கு அரசு எவ்வித சலுகையும் அளிக்கப்படாத நிலையிலும் கூட இத்தொழிலில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இயற்கை இடர்பாடுகளினால் வெற்றிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தும், அரசு சார்பில் நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி ஏராளமானோர் மாற்று தொழிலுக்கு சென்றனர். இதனால் வெற்றிலை கொடி கால்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
பெரியபட்டினம் பகுதியை சேர்ந்த வெற்றிலை விவசாயி கூறுகையில், ஒரு ஏக்கர் வெற்றிலை பயிர் செய்ய ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. வெற்றிலை நோய் தாக்குதல் இல்லையெனில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு இந்த பலனை அனுபவிக்க முடியும். தற்போது வெற்றிலை உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை சரிவால் விற்பனையில் மந்தம் ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் நடைபெறும் விஷேசங்களுக்கு 10 கிலோ வெற்றிலை வாங்கியோர், தற்போது 2 கிலோ கூட வாங்குவது கிடையாது. இந்நிலையில் இதர பயிர் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகள் வெற்றிலை விவசாயிகளுக்கு அளிக்கப்படாததால், ஏராளமான விவசாயிகள் மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். இதனால் வெற்றிலை பயிரிடப்பட்ட ஏராளமான நிலங்கள் தரிசாக காணப்படுகிறது என்றார்.
பெரியபட்டினம் மற்றும் முத்துப்பேட்டை ஊராட்சிகளில் முன்பு அதிகளவில் நடந்த வெற்றிலை விவசாயம் நடந்தது. தற்போது பராமரிப்பு செலவு அதிகமாவதால் நலிவடைந்து வருகிறது. அரசு ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
The post சலுகை கிடைக்காமல் போனதால் குறைந்து வரும் வெற்றிலை விவசாயம் appeared first on Dinakaran.