பெங்களூரு: வருவாய் புலனாய்வு இயக்குநரக கஸ்டடியில் இருக்கும் நடிகை ரன்யா ராவிற்கு, சர்வதேச அளவில் தங்கம் கடத்திய கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கருத்துவதால், அவர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32), கடந்த 3ம் தேதி துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த போது, 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் உள்ள ரன்யா ராவின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கியது.
தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி தாக்கல் செய்த மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில், 45 நாடுகளுக்கு பயணித்தது தெரியவந்தது. பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு தங்கம் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. எனவே இவருக்கு சர்வதேச தங்க கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர். இந்நிலையில் ரன்யா ராவ் மீது சர்வதேச அளவில் தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்வழக்கை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுடன் இணைந்து விசாரிக்க சிபிஐ முடிவெடுத்துள்ளது.
முதல்க்கட்டமாக மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் உள்ள வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் வேலையில் சிபிஐ அதிகாரிகள் இறங்கியுள்ளனர். அவர்கள் ரன்யா ராவின் வெளிநாட்டு தொடர்புகளை அறிவதற்காக அவரது மொபைல் போன் மற்றும் மடிக்கணினியை ஆய்வு செய்து வருகிறது. நாளையுடன் ரன்யா ராவின் வருவாய் புலனாய்வு இயக்குநரக கஸ்டடி முடிவதால், அதன்பின் சிபிஐ தரப்பில் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தும் என்று தெரிகிறது. முன்னதாக நீதிமன்றத்தில் ரன்யா ராவ் ஆஜர்படுத்தப்பட்ட போது, கண்ணீர் விட்டு அழுதார். தனக்கு தூக்கம் வரவில்லை என்றும், மன அழுத்தமாக இருப்பதாகவும் அவரது வழக்கறிஞரிடம் கூறினார். அதனால் அவர் கன்னம், கண் வீங்கிய நிலையில் இருந்ததாக ரன்யா ராவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
The post சர்வதேச கும்பலுடன் நடிகைக்கு தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணை: பெங்களூரு, மும்பையில் தனிப்படை விசாரணை appeared first on Dinakaran.