சர்வதேச கிக் பாக்சிங்கில் பதக்கங்கள் குவிப்பு; தாயகம் திரும்பிய தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு வரவேற்பு

1 month ago 20

சென்னை: சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் பங்கேற்று தமிழகம் திரும்பிய வீரர்கள், வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் கடந்த செப்.24ம்தேதி முதல் 29ம்தேதி வரை உலக கோப்பை உஸ்பெகிஸ்தான் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. சமீபத்தில் ஊட்டி மற்றும் திகாவில் நடந்து முடிந்த 7, 8வது சர்வதேச பயிற்சி பெற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சேம்பியன்ஷிப் கமிட்டி மூலம் தேர்வான 11 வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். 6 நாட்கள் நடைபெற்ற போட்டியில் 81 நாடுகளை சேர்ந்த 2715 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 55 கிலோ ஜூனியர் எடைப்பிரிவில் சுபாஷினி 2 தங்க பதக்கங்களையும், 47 கிலோ இளையோர் எடைப் பிரிவில் அஷ்வின் வெள்ளி பதக்கமும் வென்றனர். 65 கிலோ லைட் காண்டாக்ட் & கிக் லைட் பிரிவில் ஜிவந்திகா 2 வெண்கல பதக்கங்களையும், 42 கிலோ புள்ளி சண்டை பிரிவில் தீபலட்சுமி, 50 கிலோ கிக் லைட் பிரிவில் நிவேதா, சீனியர் 94 கிலோ கிக் லைட் பிரிவில் வசீகரன் ஆகியோர் தலா ஒரு வெண்கல பதக்கம் வென்றனர்.

2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விளையாட்டில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டிலிருந்து 11 பேர் சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்காக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வீரர், வீராங்கனைகள் நன்றி தெரிவித்துள்ளனர். போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் 2 லட்சம் வீதம் 11 வீரர், வீராங்கனைகளுக்கு 22 லட்ச ரூபாயை தமிழ்நாடு அரசு விளையாட்டுத்துறை வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே கிக் பாக்ஸிங்கிற்கு எந்த மாநில அரசும் உதவி செய்யாத நிலையில் முதல் முதலாக தமிழ்நாட்டில் வீரர்களுக்கு உதவி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post சர்வதேச கிக் பாக்சிங்கில் பதக்கங்கள் குவிப்பு; தாயகம் திரும்பிய தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article