
ராமேசுவரம்,
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கோவிலில் சாமியை தரிசனம் செய்ய ஆடி, தை அமாவாசை, புரட்டாசி மாத மகாளயஅமாவாசை மற்றும் சர்வ அமாவாசை நாட்களில் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். பங்குனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்கு நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் அதன் பின்னர் கடற்கரையில் அமர்ந்து இறந்த தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி திதி, தர்ப்பண, சங்கல்ப பூஜை செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து கோவிலில் வடக்கு கோபுர வாசலில் இருந்து ரத வீதியில் நீண்ட வரிசையில் நின்று 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடினார்கள். கோவிலில் சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்வதற்கும் பிரகாரத்தின் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர். அது போல் சர்வ அமாவாசையை முன்னிட்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் நேற்று புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
இதே போல் ராமநாதபுரம் அருகே சேதுக்கரை கடல் மற்றும் தேவிபட்டினம் நவபாஷாண கடலிலும் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.