சர்பராஸ் கான் 8வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தது இந்தியாவின் மோசமான முடிவு - மஞ்ரேக்கர்

2 weeks ago 5

மும்பை,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 82 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 86 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கில் 31 ரன்னுடனும், பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 59.4 ஓவர்களில் 263 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 43.3 ஓவர்களில் 171 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் முதல் இன்னிங்சின் போது இளம் வீரரான சர்பராஸ் கான் 8வது இடத்தில் பேட்டிங் ஆட வந்தார்.

8வது இடத்தில் களமிறங்கிய சர்பராஸ் கான் 4 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இந்நிலையில் சர்பராஸ் கானை 8வது இடத்தில் விளையாட வைத்தது மிகவும் தவறான முடிவு என ரோகித் சர்மா மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோரை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

தனது முதல் 3 போட்டிகளில் 3 அரை சதங்கள் அடித்து பெங்களூருவில் 150 ரன்கள் குவித்து நல்ல பார்மில் உள்ள இந்த பையன் (சர்பராஸ் கான்) சுழற்பந்து வீச்சாளர்களை நன்றாக ஆடக் கூடியவர். அப்படிப்பட்ட சர்பராஸ் கான் இடது - வலது கை ஆட்டக்காரர்கள் ஒரு சேர (பார்ட்னர்ஷிப்) ஆட வேண்டும் என்பதற்காக 8வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தது இந்தியாவின் மோசமான முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article