சரியான பதிலடி கொடுக்கப்படும் ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை: ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து எதிர்தாக்குதலுக்கு தயாராகிறது; மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பு

1 month ago 12

ஜெருசலேம்: தங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி மிகப்பெரிய தவறை செய்த ஈரான் அதற்காக மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டுமெனவும், அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு, அடுத்த கட்ட தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதால் மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேலின் எதிர்தாக்குதலை எதிர்கொள்ள ஈரானும் தயார் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலில் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.

ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் தயவில் செயல்படும் ஹிஸ்புல்லா, ஹவுதி படையினர் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதால், லெபனான், ஏமனுக்கு எதிராகவும் போர் விரிவடைந்தது. கடந்த 2 வாரமாக லெபனான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உள்ளிட்ட முக்கிய தளபதிகளை படுகொலை செய்தது. இஸ்ரேலின் தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளனர். அதோடு லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லாவை ஒட்டுமொத்தமாக அழிக்க இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலையும் தொடங்கி உள்ளது. மறுபுறம் இந்த அமைப்புகளை ஆதரித்து வரும் ஈரானுக்கும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.

இந்த சூழலில், லெபனான் மக்களை கொன்று குவிப்பதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் இரவு ஈரான் ராணுவம் 180க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவியது. டெல் அவிவ் நகரின் வானில் ஈரான் ஏவுகணைகள் நுழைந்ததும் சைரன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பீதி அடைந்த இஸ்ரேல் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த தாக்குதலில் பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை என இஸ்ரேல் கூறி உள்ளது. ஆனாலும், இஸ்ரேல் மீதான ஈரானின் நேரடி தாக்குதல், போரை புதிய கட்டத்திற்கு விரிவுபடுத்தி உள்ளது.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், இதற்கான பெரும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என அறிவித்தார். ஈரானின் தாக்குதலுக்கு சரியான நேரத்தில், சரியான பதிலடி தரப்படும் என்றும் அதற்கான நேரத்தையும் இலக்கையும் விரைவில் முடிவு செய்வதாக நெதன்யாகும் எச்சரித்துள்ளார். அதேசமயம் ஈரானும் இது தற்காப்புக்கான பதிலடி என்றும், இதற்கு இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என பதிலளித்தது. இஸ்ரேல் எதிர்தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ள ஈரான் ராணுவமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக அந்நாட்டின் அனைத்து விமான சேவைகளும் 2வது நாளாக நேற்று ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் ஏவுகணை தாக்குதலை கண்டித்த அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்பதாக அறிவித்துள்ளன. மத்திய கிழக்கிற்கு கூடுதல் படைகளை பிரான்ஸ் அனுப்பி உள்ளது. அமெரிக்க போர் கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் தயார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த விஷயத்தில் இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்க வீரர்கள் திறம்பட செயல்படுவார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதனால் எந்த நேரத்திலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அனைத்து வல்லரசு நாடுகளும் இஸ்ரேல் பக்கம் இணைந்திருப்பதால் மத்திய கிழக்கின் போர் பதற்றம் உலக நாடுகளையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கி உள்ளது. இந்தியா, சவுதி அரேபியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மத்திய கிழக்கில் நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாமென இருதரப்பையும் வலியுறுத்தி உள்ளன.

* நெதன்யாகுவை தீர்த்துக்கட்ட குறி
ஈரான் உளவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு குறிவைத்திருப்பதாகவும், அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு தீர்த்துக் காட்டுவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளது. அதே போல, ஈரானின் எண்ணெய் கிணறுகளையும், அதன் முக்கிய தலைவர்களை படுகொலை செய்ய இஸ்ரேல் குறிவைத்துள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை கொன்ற பிறகு இஸ்ரேலின் அடுத்த பட்டியலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமனேனி இருக்கிறார். இதனால், காமனேனி தற்போது ஈரானில் பாதுகாப்பான இடத்தில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளார்.

* எல்லா பிரச்னைக்கும் அமெரிக்காதான் காரணம்
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனேனி நேற்று எக்ஸ் தள பதிவில், ‘‘நமது பிராந்தியத்தின் பிரச்னை மற்றும் இப்போரின் ஆணிவேர், அமைதி நிலவ வேண்டுமென அறிவுரை சொல்லும் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் தான். அமெரிக்காவும், மேற்கத்திய படைகளும் நமது பிராந்தியத்தை விட்டு வெளியேறினாலே இங்கு எந்த போருக்கும் அவசியமிருக்காது. இப்போரில் கடவுள் நமக்கு உதவுவார். கடவுளின் கருணையால் நமது பிராந்தியத்தில் இருந்து எதிரிகளை ஒழித்து கட்டுவோம்’’ என கூறி உள்ளார்.

* லெபனானுக்கு ரஷ்யா, சீனா ஆதரவு
இஸ்ரேலுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், லெபனானின் இறையாண்மையில் தலையிடக் கூடாது என இஸ்ரேலுக்கு ஆயுத பலம் கொண்ட ரஷ்யா, சீனா கண்டனம் தெரிவித்துள்ளன. லெபனானில் இருந்து உடனடியாக இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டுமென ரஷ்யா வலியுறுத்தி உள்ளது.

* இந்தியர்களுக்கு எச்சரிக்கை
இஸ்ரேல் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும், உள்நாட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி நடக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், பாதுகாப்பு பதுங்கு குழிகளுக்கு அருகிலேயே இருக்க வேண்டும். நிலைமையை இந்திய தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தூதரகத்தின் 24/7 உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்’’ என கூறப்பட்டுள்ளது.

* 8 இஸ்ரேல் வீரர்கள் பலி
லெபனான் எல்லையில் தரை வழி தாக்குதலை நேற்று முன்தினம் தொடங்கிய இஸ்ரேல் நேற்று மேலும் ஒரு படைப்பிரிவை அங்கு அனுப்பி வைத்தது. அவர்கள் ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தரை வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, லெபனான் மோதலில் முதல் முறையாக நேற்று ஒரே நாளில் இஸ்ரேலின் 8 ராணுவ வீரர்கள் பலியாயினர். லெபனான் மோதலில் இஸ்ரேலுக்கு ஏற்படும் முதல் பின்னடைவு இதுதான்.

* ஈரான், லெபனானில் மக்கள் கொண்டாட்டம்
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை ஹிஸ்புல்லா, ஹவுதி அமைப்பினர் வரவேற்றுள்ளதோடு, லெபனான், ஈரான், காசாவில் பொதுமக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஈரானில் மக்கள் வெடி வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். லெபனானில் உள்ள பாலஸ்தீன முகாம்களில் மக்கள் ஆரவாரம் செய்தனர். காசா மக்களுக்கு ஈரானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஜோர்டானில் சாலை, கடற்கரைகளில் மக்கள் குவிந்து கைதட்டி ஈரானுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

* எதிரி ஏவுகணைகளை அழிப்பதில் கில்லாடி
அதிநவீன ஆயுதங்களையும், வலுவான ராணுவத்தையும் கொண்டுள்ள இஸ்ரேல் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்டுள்ளது. இஸ்ரேலின் ஐயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பு எதிரிகளின் எந்த ஏவுகணைகளையும் வானிலையே இடைமறித்து அழிக்கக் கூடியது. அதன் வான் பாதுகாப்பு அமைப்பின் சக்தி மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது. ஈரான் நேற்று முன்தினம் இரவு சுமார் 200 ஏவுகணைகளை ஏவியதில், பல ஏவுகணைகளை வானிலேயே இஸ்ரேல் தகர்த்தது. இதில், அமெரிக்காவும், இங்கிலாந்து படைகளும் உதவினாலும், பெரும்பாலான ஏவுகணைகளை அழித்ததில் இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏற்கனவே ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி படையினரின் டிரோன், ராக்கெட்களையும் அசால்டாக அழித்த இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்புகள், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் விட்டு வைக்கவில்லை. இதனால் சில ஏவுகணைகள் மட்டும் விமானப்படை தளத்தை தாக்கியதாகவும், எந்த போர் விமானமும் சேதம் அடையவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 2 பேர் காயமடைந்துள்ளனர். 100 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஈரானின் தாக்குதலில் மிகப்பெரிய தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க அதிபர் பைடனும் கூறி உள்ளார். தங்களின் வான் பாதுகாப்பு அமைப்பால் 100 சதவீதம் பாதுகாப்பு கிடைக்காது என்றாலும், பெரிய அளவிலான சேதத்தை தவிர்க்க முடியும் என இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் கூறி உள்ளனர்.

* ஈரான் பயன்படுத்திய நவீன ஏவுகணைகள்
இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலில் ஈரான் தனது அதிநவீன ஏவுகணைகளை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் முதல் முறையாக பத்தா-2 எனும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவி உள்ளது. இந்த ஏவுகணை சிக்கலான கணிக்க முடியாத பாதையில் பயணிக்கும் திறன் கொண்டது. 1,400 கிமீ அப்பால் உள்ள இலக்கை கூட மணிக்கு 16,000 கிமீ வேகத்தில் சென்று தாக்க முடியும். இதன்படி பார்த்தால் ஈரானில் இருந்து வெறும் 8 நிமிடத்தில் இந்த ஏவுகணை இஸ்ரேலை சென்று தாக்கிடும்.

அதோடு இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை மீறி, கண்ணிமைக்கும் நேரத்தில் பாதையை மாற்றக் கூடியது. இஸ்ரேல், அமெரிக்காவிடம் உள்ள அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களால் கூட பத்தா-2வை தடுக்க முடியாது என ஈரான் ஏற்கனவே கூறியிருந்தது.அடுத்ததாக ஈரானின் நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணையான ஷஹப்-3 பயன்படுத்தப்பட்டுள்ளது. 1200 கிலோ வரையிலான வெடிபொருளை சுமந்து செல்லக் கூடிய இந்த ஏவுகணையை நகரும் லாஞ்சர்களில் இருந்து கூட ஏவ முடியும்.

இறுதியாக ஹஜ் காசெம் ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி உள்ளது. இந்த ஏவுகணை மூலம் 1400 கிமீக்கு மேற்பட்ட தொலைவில் உள்ள இலக்கையும் அழிக்க முடியும். இஸ்ரேல், ஈரான் இடையேயான தூரம் சுமார் 2,000 கிமீ. இந்த ஏவுகணைப் போல, மொத்தம் 3,000 ஏவுகணைகளை ஈரான் தனது ஆயுத களஞ்சியத்தில் வைத்துள்ளது. இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவிய பல ஏவுகணைகளின் வெடித்து சிதறிய பாகங்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரையிலும், ஜோர்டான் நாட்டின் கிராமப்பகுதிகளிலும் கிடந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

* கச்சா எண்ணெய் விலை உயருமா?
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 5 சதவீதம் அதிகரித்தது. அடுத்ததாக இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தினால் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உள்ளது.

* டென்மார்க்கில் குண்டுவெடிப்பு
இதற்கிடையே டென்மார்க் தலைநகர் கோபன்ஹகனில் இஸ்ரேல் தூதரம் அருகே நேற்று அதிகாலை 2 குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என கோபன்ஹகன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

* யூதர்கள் புத்தாண்டு வாழ்த்து கூறிய மோடி
பரபரப்பான போருக்கு மத்தியில், யூதர்களின் புத்தாண்டை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘எனது நண்பர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், இஸ்ரேல் மக்களுக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள யூத சமூகத்தினருக்கும் ரோஸ் ஹசானா நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு உங்கள் அனைவரின் வாழ்விலும், அமைதி, நம்பிக்கை, நல்ல ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்’’ என வாழ்த்தி உள்ளார்.

* ஐநா தலைவருக்கு தடை
மத்திய கிழக்கில் நிலைமை எல்லைமீறி செல்லும் நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதற்கு முன்பாக, ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டரஸ் இஸ்ரேலில் நுழைய அந்நாடு தடை விதிப்பதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. இதுதொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கட்ஸ் அளித்த பேட்டியில், ‘‘மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு பாரபட்சமின்றி கண்டனம் தெரிவிக்க ஐநா தலைவர் தவறிவிட்டார். அவர் ஈரான் பெயரை குறிப்பிடவில்லை. மேலும், இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே அவர் தீவிரவாதிகள் பக்கம் பேசி வருகிறார். இத்தகைய பாரபட்சமான நடவடிக்கைக்காக அவர் இஸ்ரேலில் நுழைய தடை விதிக்கிறோம்’’ என கூறி உள்ளார். இது இஸ்ரேலுக்கும் ஐநாவுக்கு இடையேயான மோதலை மேலும் பெரிதாக்கி உள்ளது.

* காசாவில் தாக்குதல் தீவிரம்: 51 பேர் பலி
ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து காசாவிலும் நேற்று இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. அங்கு தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 51 பேர் பலியாகினர். 82 பேர் காயமடைந்தனர். மேலும் காசாவின் பிற பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 23 பேர் பலியாகி உள்ளனர்.

The post சரியான பதிலடி கொடுக்கப்படும் ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை: ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து எதிர்தாக்குதலுக்கு தயாராகிறது; மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article