
சென்னை,
சென்னை, மணலி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து, சரக்கு ரெயில் ஒன்று, 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில், திருவள்ளூர் ரெயில் நிலையத்தை கடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டது.
இதனால் சுமார் 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணெய் டேங்கர்களில் உரசல் ஏற்பட்டு ஒரு டேங்கரில் தீப்பற்றியது. அந்த தீ மளமளவென அடுத்தடுத்த 6 டேங்கர்களுக்கும் பரவி, கொழுந்து விட்டு எரிந்தது. தீ விபத்து காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தீ விபத்தை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் இல்லை.
இதுகுறித்து தகவலறிந்து, திருவள்ளூர், திரூர், கும்மிடிப்பூண்டி சிப்காட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள், தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுனர். டீசல் பற்றி எரிந்ததால் தீயை அணைக்கு பணியில் தாமதம் ஏற்பட்டாலும், வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்க கடுமையாக போராடினர்.
இந்த நிலையில், டீசல் டேங்கர் ரெயிலில் அதிகாலை 5.20 மணிக்கு பற்றிய தீ, 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. ரெயில் பெட்டிகள் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம், மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்தால் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம் மற்றும் மின்சார கம்பிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. தண்டவாளங்கள் மற்றும் உயர் மின்னழுத்த கம்பிகளை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சரக்கு ரெயிலில் தீ பிடித்த விபத்து குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முழுமையான விசாரணை தேவைப்படுவதால் ரெயில்வே ஏடிஜிபி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்படுள்ளன.
தீ விபத்து நடந்த இடத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.