கோவை: சயனைடு சாப்பிட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் எழுதி வைத்த பரபரப்பு கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை செல்வபுரம், இந்திரா நகர் அமுல் நகர் 2வது வீதியை சேர்ந்தவர் திருமுருகன் (47). இவரது மனைவி பிரதிபா ரமணி (38). இவர்களது மகள் ஜனனி (17). திருமுருகன் தங்க கட்டிகளை வாங்கி ஆபரணமாக செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி அவருக்கு உதவியாக இருந்து வந்தார். மகள் ஜனனி பிளஸ்-2 முடித்து நேற்று வெளியான தேர்வு முடிவில் 80 சதவீதம் மதிப்பெண் பெற்று இருந்தார். இதற்கிடையில், திருமுருகனுக்கு கடந்த சில ஆண்டுகளாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. அதற்காக சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அதனை திருப்பி செலுத்த முடியாததால் கணவன், மனைவி மனவேதனையுடன் இருந்து வந்தனர். இந்நிலையில், தொழில் நஷ்டத்தால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் பிளஸ்-2 தேர்வு முடிவு பார்த்து வந்த மகள் ஜனனியை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், பச்சாப்பாளையத்தில் உள்ள பிரதிபா ரமணியின் தங்கை ஜெயப்பிரியா வீட்டிற்கு ஜனனியை அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சித்தி வீட்டில் இருந்த ஜனனி இரவு பெற்றோரிடம் பேசுவதற்காக அவர்களை போனில் அழைத்துள்ளார். வெகு நேரமாகியும் அவர்கள் போனை எடுக்காததால் சித்தி ஜெயப்பிரியாவிடம் தெரிவித்துள்ளார். அவரும் கணவர் சக்திவேலை அழைத்து கொண்டு திருமுருகன் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர்களது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, இருவரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர்கள் இறந்துகிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து செல்வபுரம் போலீசார் வந்து வீட்டில் சோதனை செய்து தம்பதி எழுதியிருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், நாங்கள் தன்மானத்துடனும், கவுரவத்துடனும், அவமானம் எதுவும் ஏற்படாமல் வாழ ஆசைப்படுகிறோம்.
எங்களுக்கு வேலை கொடுத்தவர்களுக்கும், தங்கம் கொடுத்தவர்களுக்கும் எங்களால் எந்த தவறும் நேராமல் அனைத்தையும் முழுவதுமாக திருப்பிக் கொடுக்க நீங்கள் தான் துணை இருக்க வேண்டும். ஜனனி நல்ல மதிப்பெண் பெற்று அவள் விரும்பிய பாடத்தை நல்ல முறையில் படிக்க வேண்டும். நாங்கள் அனைவரும் குறித்த நாளில் மிகவும் மகிழ்ச்சியாக மந்த்ராலயம் வந்து உங்களை தரிசித்து மகிழ வேண்டும் இறைவா’ என்று எழுதி இருந்தனர்.
The post சயனைடு சாப்பிட்டு தம்பதி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது appeared first on Dinakaran.