சமூக விரோதிகள் வைத்த தீயால் எரிந்த பனை மரங்கள்: 30 மரங்கள் கருகியது

3 weeks ago 4

புதுச்சேரி: சமூக விரோதிகள் வைத்த தீயால் 30க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி பூரணாங்குப்பம் அடுத்த புதுக்குப்பம் கடற்கரையையொட்டி கடல் அரிப்பை தடுக்கும் வகையில், பனைமரங்கள் வரிசையாக நடப்பட்டு வளர்ந்துள்ளது. இவைகள், இந்த சாலையில் செல்லும்போது ரசிக்கும் வகையிலும் இருக்கும். இந்நிலையில் நேற்று மாலை சமூக விரோதிகள் சிலர், அப்பகுதியில் உள்ள தோப்பில் அமர்ந்து மது குடித்துவிட்டு போதையில் பனை மரத்தை தீ வைத்து எரித்துள்ளனர்.

தீ கொழுந்துவிட்டு எரிந்து காட்டு தீ போல அருகில் இருந்த மற்ற மரங்களுக்கும் பரவியது. இதில் 30க்கும் மேற்பட்ட மரங்களும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதுகுறித்து பனை விதை ஆர்வலர்கள் கூறுகையில், ‘பனை மரங்கள் புயலின் வேகத்தை கட்டுப்படுத்தக்கூடியது, நிலத்தடி நீரை சேமித்து குடிநீருக்கு ஆதாரமாக விளங்குகிறது. பனம் கிழங்கு, பனம்பழம் ஆகியவை மக்களுக்கு உணவாக அமைந்துள்ளது. குடிபோதையில் பனமரத்தை எரித்தவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post சமூக விரோதிகள் வைத்த தீயால் எரிந்த பனை மரங்கள்: 30 மரங்கள் கருகியது appeared first on Dinakaran.

Read Entire Article