சமூக ஊடகங்களை கவனமாக கையாள வேண்டும் வீணர்களின் திசைதிருப்பல்களுக்கு நேரம் கொடுக்கக் கூடாது: யூடியூப் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

1 month ago 9

சென்னை: இனப்பகைவர்களும் அவர்களுக்குத் துணை போகும் வீணர்களும் உண்டாக்கும் திசைதிருப்பல்களுக்கு நேரம் கொடுக்கக் கூடாது என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தகவல் தொழில்நுட்ப அணி செப்டம்பர் மாதத்தைத் திராவிட மாதமாகக் கொண்டாடி வருகிறது. திராவிட மாதத்தின் நிறைவுநாளான நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தகவல் தொழில்நுட்ப அணியின் யூடியூப் பக்கத்தில் சிறப்புரையாற்றினார்.

அதன் விவரம்:
இனப் பகைவர்களும் அவர்களுக்குத் துணைபோகும் வீணர்களும் உண்டாக்கும் திசைதிருப்பல்களுக்கு நீங்கள் நேரம் கொடுக்கக் கூடாது. சமூக ஊடகங்களில் என்ன ’டிஸ்கஸ்’ செய்கிறீர்கள் என்று நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இங்கு பேசப்படும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது. பொய்களையும், அவதூறுகளையும், பாதி உண்மைகளை மட்டும் சொல்லிச் சிலர் குழப்புவார்கள். அதற்கு நீங்கள் யாரும் ஏமாந்துவிடக் கூடாது. எந்தச் செய்தி வந்தாலும் ‘எமோஷனலாக’ மட்டும் அணுகாதீர்கள். அந்தச் செய்தி பற்றிய உண்மைத் தன்மையைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அந்தப் பொய்யைப் பரப்புறகிறவர்களுக்கு இல்லாத இரண்டு, நம்மிடம் இருக்கிறது.

அதுதான் பெரியார் சொன்ன மானமும் அறிவும், மனிதருக்கு அழகு. எனவே, கவனமுடன் கடமையை ஆற்றுங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ்தள பதிவில், “செப்டம்பர் மாதம் முழுவதையும் திராவிட மாதம் என கொண்டாடிய கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் பணிகள் பாராட்டுக்குரியது. கழக வரலாறு – கொள்கை – லட்சியங்கள் ஆகியவற்றையும் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் இளைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் அருமைத் தம்பி டி.ஆர்.பி. ராஜாவுக்கு, மாநிலம் முதல் கிளைக் கழகங்கள் வரை அவருக்குத் துணை நிற்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள்’’ எனக் கூறியுள்ளார்.

The post சமூக ஊடகங்களை கவனமாக கையாள வேண்டும் வீணர்களின் திசைதிருப்பல்களுக்கு நேரம் கொடுக்கக் கூடாது: யூடியூப் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article