சமூக ஆர்வலர் உயிரிழப்பு: உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

3 hours ago 1

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கனிம வள கொள்ளைக்கு எதிராக சட்டரீதியாகப் போராடிவந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி விபத்தில் இறந்த சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக்கொண்டுவந்து, நியாயம் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு மாநிலத்தில் கனிம வள கொள்ளைக்கு எதிராக முறையான நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் சரியான நடவடிக்கையை மேற்கொள்ளாத காரணத்தால் கனிம வள கொள்ளை நடைபெறுவது நீடித்து, கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடி வந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி விபத்தில் இறந்தார். அவரது இறப்பு மிகவும் வருத்தத்துக்குரியது.

குறிப்பாக நடைபெற்ற விசாரணையில், நடந்தது விபத்து அல்ல என்றும் கல் குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் ஜகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக சமூக ஆர்வலர் ஜகபர் அலி அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்தும் கனிம வள கொள்ளை நடைபெற்று வந்துள்ளது. அதாவது ஒதுக்கப்பட்ட அளவை விட பல மடங்கு கனிமங்கள் வெட்டி அள்ளப்பட்டு, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி வருவது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்துள்ளார்.

தொடர்ந்து கடந்த ஜனவரி 10 ஆம் தேதி ஜகபர் அலி புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் கனிம வள கொள்ளை தொடர்பாக மனு அளித்துள்ளார். இதற்கெல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் கனிம வள கொள்ளையும் நடைபெறாமல், உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது.

உயிரிழந்த சமூக ஆர்வலரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு உயிரிழந்தவரின் குரும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

தமிழக அரசு கனிம வள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி இறப்புக்கான காரணத்தை உரிய விசாரணை மூலம் கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க, நியாயம் கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசு மாநிலத்தில் கனிம வள கொள்ளை எங்கும் நடைபெறாது என்பதற்கேற்ப தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார் .

Read Entire Article