சென்னை,
இயக்குனர் நந்தா பெரியசாமி 'ராஷ்மி ராக்கெட்' என்ற இந்திப் படத்தின் மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்தவர். தற்போது இவரது இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள திரைப்படம் 'திரு.மாணிக்கம்'. நடிகை அனன்யா இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'சீதா ராமம்' படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஜி.பி.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா? அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பதை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் உரிமையை ஜீ 5 நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 20-ந் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை இயக்குனர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.