
சமயபுரம் மாரியமன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவு 8 மணி அளவில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளினார்.
நேற்று இரவு சமயபுரம் தெப்பக்குளம் அருகே உள்ள சூரப்பநாயக்கர் மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சூரப்பநாயக்கர் மண்டகப்படி ஆஸ்தான உபயதாரர் வழக்கறிஞர் காரைக்கால் நந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மண்டகப்படி உபயம் கண்டருளினார். தொடர்ந்து வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதற்காக உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயிலிலிருந்து புறப்பட்டு, தேரில் எழுந்தருளினார். தேரில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்பட்டு காலை 10.31 மணிக்குத் தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்துதேர் இழுத்தனர். மாட வீதிகளின் இருபுறமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர்.
அலகு குத்தி வழிபாடு
பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் வழிபட்டனர். தேருக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் பால் குடம், தீச்சட்டி, பறவைக் காவடி ஆகியவற்றை எடுத்து வந்து, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
தேரோட்டத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். எனவே, கூட்டத்தை ஒழுங்குபடுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் தற்காலிக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்தையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அன்னதானம்
நேற்று முன்தினம் மாலை முதல் திருவானைக்காவல், கொள்ளிடம் டோல்கேட், பளூர், சமயபுரம் உள்ளிட்ட இடங்களில், பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் நீர்மோர், குளிர்பானங்கள், குடிநீர், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
நாளை (புதன்கிழமை) அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அம்மன் முத்துப்பல்லக்கிலும் புறப்பாடாகிறார். 18-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனை நடைபெறுகிறது. தேரோட்டம் முடிந்து எட்டாம் நாளான 22-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.