சென்னை: சமக்ர சிக்ஷ அபியான் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காததால் 20,000 ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் சமக்ர சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 20,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றிய அரசு 60%, மாநில அரசு 40% என்ற அடிப்படையில் நிதியை பங்கீட்டு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான ரூ.2,151 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்காத நிலையில், கடந்த 4 மாதங்களாக மாநில அரசின் நிதியில் இருந்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காத காரணத்தால் சமக்ர சிக்ஷ அபியான் திட்ட பணியாளர்கள் சுமார் 20,000 பேருக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாததால் ஆசிரியர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அண்மையில் பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நிதியை விடுவிக்க வலியுறுத்திய போதிலும் ஒன்றிய அரசு மெத்தனமாக இருப்பதாக ஆசிரியர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தமிழ்நாடு அரசு நிதியில் இருந்து ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய கல்வி கொள்கையின் அங்கமான பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஏற்று கொண்டால்தான் கல்வி நிதியை விடுவிக்க முடியும் என ஒன்றிய அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், இதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
The post சமக்ர சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு நிதி தராத ஒன்றிய அரசு: 20,000 ஆசிரியர்கள் பாதிப்பு!! appeared first on Dinakaran.