*பிச்சாண்டார் கோயில் – திருச்சி
திருச்சி – சேலம் பிரதான சாலையில் கொள்ளிடம் டோல்கேட் அருகில் பிச்சாண்டார் கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு உத்தமர் கோயிலானது, அருள்மிகு ஞான சரஸ்வதி சமேத பிரம்மதேவர், பூரண வல்லித் தாயார் சமேத புருஷோத்தமப் பெருமாள், சௌந்தர்ய பார்வதி சமேத பிச்சாடனேஸ்வரர் ஆகிய முப்பெரும் தேவியர் உடனுறை மும்மூர்த்திகள் தனித்தனி சந்நதிகளில் குடி கொண்டருளும் இந்தியாவின் ஒரே திருக்கோயில் ஆகும்.
வேறு எந்தத் திருக்கோயிலிலும் இல்லாத சிறப்பாக ‘சப்த குருக்கள்’ எனப்படும் பிரம்ம குரு, விஷ்ணு குரு, சிவ குரு, சக்தி குரு, சுப்பிரமணிய குரு, தேவ குரு பிரகஸ்பதி, அசுர குரு சுக்ராச்சார்யா எனப்படும் ஏழு குரு பகவான்களும் ஒருங்கே அமைந்த இக்கோயிலில் குரு பெயர்ச்சி விழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ‘குரு பெயர்ச்சி’ என்பது நவக்கிரகங்களில் உள்ள தேவ குருவாகிய பிரகஸ்பதி ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவதைக்
குறிக்கும்.
‘குருவைப் போல கொடுப்பார் இல்லை’, ‘குரு பார்த்தால் கோடி நன்மை’ என்ற பழமொழிகள் குரு பெயர்ச்சியின் முக்கியத்துவத்தை தெளிவாக விளக்குகின்றன. நவக்கிரகங்களில் உள்ள வியாழன் கிரகமே பொதுவில் குரு பகவான் என்று அழைக்கப்படுகிறார். ‘பிரஹஸ்பதி’ என்ற வடமொழிப் பெயர் கொண்டு விளங்கும் இவரே முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் குருவாக ‘தேவகுருவாக’ விளங்குகிறார். சுபகிரகங்களில் முதன்மையான இவருக்கு பகை கிரகங்களே இல்லை.
இவருக்கு கொடுக்க மட்டுமே தெரியும். கெடுக்கத் தெரியாது. குருவின் பார்வை ஒரு மூடனின் மீது பட்டால் அவன்கூட பேரறிவாளி ஆகிவிடுவான். ஜோதிட நூல்களால் புத்திரகாரகன் என்று அழைக்கப்படும் குருவின் அருள் இருந்தால்தான்‘குழந்தைப் பேறு’ கிடைக்கும். நல்லறிவு, ஞானம், உயர் பதவி, தயாள குணம், நீதி உணர்வு, சொல்வன்மை, கலைகளில் தேர்ச்சி, மன மகிழ்ச்சி, சமய தீட்சை, தேவ வேதாந்த அறிவு ஆகியவை குரு பகவானின் திருவருளால் கைகூடும்.
நவ கிரகங்களில் உள்ள மற்ற கிரகங்களால் பக்தர்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளை நீக்கும் ஆற்றல் உள்ளதால் இவரை ‘கிரக பீடாபஹாரர்’ என்றும், நீதி சாஸ்திரங்களின் ஆசிரியராக உள்ளதால் ‘நீதிஜநக நீதிகாரகன்’ என்றும், அழகிய தோற்றம் உடையதால் ‘சௌம்ய மூர்த்தி’ என்றும், மூவுலகிலும் போற்றப்படுவதால், ‘த்ரிலோகேசர்’ என்றும் பல பெயர்களில் குரு பகவான் அழைக்கப்படுகிறார். குரு வாரத்தின் போதும், குரு பெயர்ச்சியின் போதும் மெளன குரு தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது ஏன் தெரியுமா?
பற்பல சிறப்புகள் பெற்று விளங்கினாலும், குரு வாரம் எனப்படும் வியாழக்கிழமைகளிலும், குருப் பெயர்ச்சியன்றும் குரு பிரகஸ்பதியைவிட தட்சிணா மூர்த்தியை மக்கள் வழிபடக் காரணம் என்னவெனில், நவக்கிரகத்தில் உள்ள எந்த ஒரு கிரகத்துக்கும் தோஷங்களை முற்றிலும் நீக்கும் அதிகாரம் இல்லை என்பதே ஆகும். குறிப்பிட்ட கிரகதோஷ பரிகாரம் வேண்டுபவர்கள் அந்தந்த கிரகங்களின் அதிதேவதையையோ, பிரத்யதி தேவதையையோ வணங்க வேண்டும். அந்த அடிப்படையில் பார்க்கும் போது, குரு பிரகஸ்பதியின் அதிதேவதையாகிய பிரம்ம தேவரை வணங்குவதே குரு தோஷ நிவர்த்திக்கு மிகச் சிறந்த வழியாகும்.
ஆனால், பொதுவாக பிரம்மாவுக்கு தனிக் கோயிலோ, சந்நதியோ இல்லாததாலும், அவ்வாறு இருப்பின் பிரம்மாவிற்கென சிறப்பு பூஜைகள் இல்லாததாலும் ‘நவகிரகங்களின் நாயகர்’ என்றழைக்கப் படும் சிவபெருமானின் ஞானவடிவாகிய தட்சிணா மூர்த்தியை குருவாகக் கொண்டு நாம் வழிபடுகிறோம். நவகிரகத்தில் உள்ள தேவகுரு பிரஹஸ்பதியின் அதிதேவதையாகிய பிரம்ம தேவரே உத்தமர் கோயிலில் தனி சந்நதியில் தென்முகமாக குரு பகவான் ஸ்தானத்தில் அமர்ந்து அருள் புரிவதால் படைப்புக்கடவுள் பிரம்மாவை வியாழக்கிழமைகளில் வழிபட்டு அர்ச்சிப்பதாலும், குரு பெயர்ச்சியில் கலந்து கொள்வதாலும், குரு பெயர்ச்சி லட்சார்ச்சனையில் பங்கு கொள்வதாலும் குரு பகவானால் வழங்கப்படும் சகல ஐஸ்வர்யங்களும் குறைவின்றி கிடைக்கிறது. மேலும் ‘சப்தகுரு ஸ்ரீ கண்டேப்யா’ என்ற ஸ்லோகத்தின் படி உள்ள ஏழு குரு பகவான்களையும் தன்னுள் கொண்ட ஒரே திருத்தலமாக உத்தமர் கோயில் விளங்குகிறது.
அதிலும், சிறப்பாக தேவகுருவாகிய பிரகஸ்பதியும், அசுர குருவாகிய சுக்ராச்சார்யாரும், ஞான குருவாகிய சுப்பிரமணியரும், பரப்பிரம்ம குருவாகிய பிரம்ம தேவரும், விஷ்ணு குருவாகிய வரதராஜப் பெருமாளும், சக்தி குருவாகிய சௌந்தர்ய பார்வதியும், சிவகுருவாகிய தட்சிணா மூர்த்தியும் குரு தட்சிணாமூர்த்தி, சக்தி குரு ஆகியோருடன் கல்வி கடவுள் சரஸ்வதியும் தென் முகமாக குடிகொண்டு இத்தலத்தில் அருள் வழங்குகின்றனர். தன்னை நாடி வரும் ஆன்மாக்களுக்கு சரணாகதி தந்து, காத்து ரட்சித்து அருளும் தெய்வங்கள்தான் ஞானத்தின் திசையாகிய தெற்கு நோக்கி இருப்பார்கள்.
இந்த ஏழு குரு பகவான்களையும் ஒரே இடத்தில் உத்தமர் கோயிலில் வழிபடுவதுடன் சப்த குருக்களையும் தன்னுள் கொண்டுள்ள ஸ்ரீகண்டனாகிய சிவபெருமானின் ஞான வடிவமாகிய
தட்சிணா மூர்த்திக்கும், குரு பகவானின் அதிதேவதையாகிய பிரம்மாவுக்கும் அர்ச்சனை செய்வதால் பாதக பலன்கள் அனைத்தும் நீங்கி சகல அனுகூலங்களும் கைவரப் பெறும் என்பது ஆன்றோர்கள் கண்டறிந்த உண்மை.
எனவே ஆண்டுதோறும் நடைபெறும் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனையில் பங்கு கொண்டு பக்தர்கள் சப்த குருக்களின் திருவருளைப் பெற திருக்கோயிலின் சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்கிறார்கள். இந்த ஆண்டு 11.5.2025ல் மிதுன ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். மூலவரான, இத்திருக்கோயிலில் அருள்மிகு புருஷோத்தம பெருமாளுக்கு சித்திரை மாத பிரம்மோற்சவம் 11 நாட்களும், சிவபெருமானுக்கு வைகாசி மாத பிரம்மோற்சவம் 11 நாட்களும் நடைபெறும். திருக்கார்த்திகை, திருவாதிரை, ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், பவித்ரோற்சவம், ஜேஷ்டாபிஷேகம், ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி முத்தங்கிசேவை உற்சவம் அனைத்தும் மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது.
இப்படி இத்தலத்தில் சைவ விழாக்களும், வைணவ விழாக்களும் கொண்டாடி சிறப்பு செய்வது சமய ஒற்றுமைக்கு இத்திருக்கோயில் எடுத்துக் காட்டாகவும், இலக்கியச் சான்றாகவும் விளங்குகிறது. மேலும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 வைணவ திருப்பதிகளில் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த பெருமை உடையது இந்த உத்தமர் கோயில்.
இதர சிறப்புகள் என்று பார்க்கும் போது, இங்கு குரு பெயர்ச்சி விழா, சனிப் பெயர்ச்சி விழா காலங்களில் பரிகார ஹோமங்களும் மற்றும் அருள்மிகு சரஸ்வதி தேவிக்கு பள்ளி முழு ஆண்டுத் தேர்வு சமயங்களில் சிறப்பு ஹோமங்களும் நடைபெறுகிறது. மேலும், இத்தலத்தில் சனி பகவான், குரு, காலபைரவர் ஆகியோர் பிச்சாண்டேஸ்வரின் நேரடிப் பார்வையிலும் மற்றும் மகாலிங்கத்திற்கும், மகாகணபதிக்கும் நடுவில் கிழக்கு திசையில் அனுகிரக மூர்த்தியாகவும் காட்சியளிக்கிறார். எனவே இங்கு சனிப் பெயர்ச்சியும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்வளவு சிறப்புப் பெற்ற திருக்கரம்பனூர், உத்தமர் கோயில், பிச்சாண்டார் கோயில் என்றெல்லாம் அழைக்கப்படும் அருள்மிகு திருக்கோயிலின் பெருமையினை பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் தன் பாடலில் பின் வருமாறு போற்றுகிறார் இப்படி;
‘‘சில மாதவம் செய்துந் தீவேள்வி வேட்டும்
பலமா நதியிற் படிந்து முலகிற்
பரம்ப நூல் கற்றும் பயனில்லை நெஞ்சே
கரம்பனூர் உத்தமர் பேர் கல்!’’
அமைவிடம்: இந்த கோயிலுக்கு வர இரண்டு வழிப்பாதை உள்ளது. சென்னையில் இருந்து பேருந்தில் வருவோர், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் என்னும் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 1 கி.மீ. தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது. ரயில் மூலமாக வருவோர், ஸ்ரீரங்கத்தில் இறங்கி பயணிக்கலாம். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து, மண்ணச்சநல்லூர் செல்லும் மண்ணச்ச
நல்லூர் மாநகரப் பேருந்துகள் நிறைய உண்டு அதிலும் பயணிக்கலாம்.
முத்துரத்தினம்
The post சப்த குரு தலத்தில் குரு பெயர்ச்சி விழா appeared first on Dinakaran.