சென்னை: சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. சட்டசபை சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு இருக்கையை விட்டு இறங்கினார். அவையை துணை சபாநாயகர் நடத்தினார். சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, எதிர்க்கட்சிகளான பாமக, பாஜக உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளனர். இரு கட்சிகளின் உறுப்பினர்களும் பேரவைக்கு வரவில்லை. தொடர்ந்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் டிவிஷன் வாக்கெடுப்புக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை ஏற்று டிவிஷன் வாக்கெடுப்பு நடத்த அனுமதி வழங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவையை நடத்தி வரும் நிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. டிவிஷன் வாக்கெடுப்புக்காக பேரவை கதவுகள் அடைக்கப்பட்டன. டிவிஷன் முறையில் 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 154 பேரும், ஆதரவாக 63 பேரும் வாக்களித்தனர். டிவிஷன் வாக்கெடுப்பிலும் சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
The post சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி appeared first on Dinakaran.