
சென்னை,
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ந்தேதி வரை நடைபெறும் என்றும் இன்று முதல் 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதற்கிடையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார். இந்த தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சபாநாயகர் அப்பாவு சட்டசபையை விட்டு வெளியே சென்றுள்ளார். துணை சபாநாயகர் பிச்சாண்டி அவையை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தீர்மானத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜக, பாமக உறுப்பினர்கள் யாரும் பேரவையில் இல்லை.