சபாநாயகருக்கு எதிரான அவதூறு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக மேல்முறையீடு

2 hours ago 1

புதுடெல்லி,

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும் அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

இது அதிமுக எம்.எல்.ஏ.க்களை களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகருக்கு எதிராக அதிமுக வக்கீல் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் அப்பாவு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த செப்டம்பர் 25-ந்தேதி தீர்ப்பு கூறியது.

அதன்படி சபாநாயகரின் பேச்சு தொடர்பாக கட்சி சார்பில் எந்த புகாரும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், தனிப்பட்ட முறையில் புகார்தாரர் அவதூறு வழக்கை தாக்கல் செய்து உள்ளதாகவும் வழக்கை தாக்கல் செய்ய கட்சி அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை எனவும் கூறி, சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராகவும், இடைக்கால தடை விதிக்க கோரியும் பாபு முருகவேல் சார்பில் வக்கீல் ராஜேஷ் சிங் சவுகான் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article