பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம் வாபஸ்

1 hour ago 2

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் தலைவர்களுக்கு வெளிநாட்டு தலைவர்கள் அளிக்கும் பரிசு எல்லாம் அரசு கருவூலத்துக்கு சென்று விடும். அவ்வாறு வழங்கப்பட்ட விலை உயர்ந்த ஆபரணம் ஒன்றை, இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அரசு கருவூலத்துக்கு குறைந்த பணம் செலுத்தி முறைகேடான வழியில் எடுத்துக் கொண்டதாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு இம்ரான் கானுக்கு கடந்த நவ.20 ஜாமீன் வழங்கியது. எனினும் அடுத்தடுத்து அவர் மீது வழக்குகள் பாய்ந்தது. இதனால், இம்ரான் கானால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் நேற்று முன் தினம் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் பரவுவதை தடுக்க இணையம் மற்றும் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டது. பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டன. போலீசார், ராணுவத்தினர் களம் இறக்கப்பட்டு போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளவும் உத்தரவிடப்பட்டது.

இதனால் இஸ்லாமாபாத்தில் வன்முறை நிலவியது. இதில் 6 போலீசார் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்திருந்தனர். நேற்று முன்தினம் இரவுவரை நீடித்த இந்த வன்முறையில் மேலும் 4 போலீசார் உயிரிழந்தனர். 3 நாட்கள் தொடர் போராட்டத்துக்கு பிறகு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இம்ரான்கான் ஆதரவாளர்கள் அறிவித்தனர். இதனால் தலைநகர் இஸ்லமபாத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

Read Entire Article