திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல கால பூஜைகளுக்காக அடுத்த மாதம் (நவம்பர்) 15ம் தேதி திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் மண்டல காலத்தில் சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்குவது என்றும், உடனடி முன்பதிவு வசதியை ரத்து செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். ஆனால் தினசரி ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 70 ஆயிரமாக குறைக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியது. ஐப்பசி மாத பூஜைக்கு நடை திறக்கப்பட்டிருந்தபோது சபரிமலைக்கு மிக அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர்.
இதனால் மண்டல காலத்தில் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் திருவனந்தபுரத்தில் கூறியது: மண்டல காலத்தில் தரிசனத்திற்கு தினசரி ஆன்லைனில் 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்யலாம். நிலக்கல், பம்பை, பந்தளம், செங்கணூர், எருமேலி, பீருமேடு ஆகிய 6 இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும். இருமுடி கட்டி சபரிமலைக்கு வரும் பக்தர்கள் யாருக்கும் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post சபரிமலை வரும் பக்தர்களுக்கு 6 இடங்களில் உடனடி முன்பதிவு வசதி appeared first on Dinakaran.