திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையைக் காண சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இந்த ஆண்டு மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி 14-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் தங்கி இளைப்பாற கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 'எடத்தவலம்' எனப்படும் 5 ஆயிரம் சதுர அடி கொண்ட பிரத்யேக தங்குமிடம், விமான நிலையத்தின் உள்நாட்டு விமான வருகைப் பகுதிக்கு அருகே திறக்கப்பட்டுள்ளது. இதனை கேரள மாநில சட்டத்துறை மந்திரி பி.ராஜீவி திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், "பக்தர்களுக்கு சுமூகமான யாத்திரை அனுபவத்தை வழங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஆண்டு சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக விமான நிலையத்தில் பிரத்யேக முனையத்தை ஏற்பாடு செய்தோம். இந்த ஆண்டு சிறப்பான வசதிகளுடன் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இந்த தங்குமிடத்தில் விமான அறிவிப்பு திரை, உணவகம், டேக்சி முன்பதிவு மையம் மற்றும் தேவசம்போர்டு சார்பில் இயக்கப்படும் உதவி மையம் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.