சத்துணவு ஊழியர்களைப் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும் - சீமான்

2 days ago 5

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்கள் தங்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும், உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும், தமிழ்நாடு அரசு அதனை நிறைவேற்ற மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் (எண்: 313) வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை வழங்காமல் ஏமாற்றி வருவது நம்பி வாக்களித்த சத்துணவு ஊழியர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

தமிழ்நாட்டு ஏழை குழந்தைகளின் கல்வி தடைபடாமலிருக்க பெருந்தலைவர் காமராசர் அவர்கள் 1955-ம் ஆண்டு அரசுப்பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார். பின்னர் அத்திட்டம் 1982-ம் ஆண்டு சத்துணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் சத்துணவு மையங்கள் அமைக்கப்பட்டு சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என்று பணியிடங்கள் உருவாக்கப்பட்டது.

தற்போது தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 1,95,000 பணியாளர்களுடன் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் 65,000 சத்துணவு மையங்களில் நாள்தோறும் 55 இலட்சம் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ – மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளாகப் பணியாற்றியும் சத்துணவு ஊழியர்களின் பணியானது இதுவரை காலமுறை ஊதிய அடிப்படையில் நிலைப்படுத்தப்படவில்லை என்பது மிகப்பெரும் கொடுமையாகும். அதோடு இதர அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை என்பது அவர்களின் உழைப்பினை உறிஞ்சி குருதியைக் குடிக்கும் கொடுங்கோன்மையாகும்.

மேலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் அரசு நியமித்த சத்துணவு பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், பள்ளிகளில் புதிதாகத் தொடங்கப்பட்ட காலை உணவு தயாரிப்புப் பணியினை திமுக அரசு தனியாருக்கு வழங்குவது ஏன்? தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தரகுத் தொகைக்காகவா? அல்லது சத்துணவு திட்டத்தையே மெல்ல மெல்ல தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான முன்னோட்டமா? என்ற ஐயமும் எழுகிறது.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதுமுள்ள 1,95,000 சத்துணவுப் பணியிடங்களில் தற்போது 60,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

ஆகவே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை மானிய கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ள நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் தயாரிக்கும் பணியையும் சத்துணவுப் பணியாளர்களிடமே முழுவதுமாக ஒப்படைத்து, அவர்களை காலமுறை ஊதியப் பணியாளர்களாக மாற்றி உரிய ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மேலும், தற்போது காலியாகவுள்ள 60,000 சத்துணவு பணியிடங்களை நேர்மையான முறையில் உடனடியாக நிரப்ப வேண்டுமெனவும், சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை மாதம் 10,000 ரூபாயாகவும், பணிக்கொடையை 5 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டுமெனவும், பணி மூப்பு மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்குப் பதவி உயர்வும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு முழுவதுமுள்ள சத்துணவு ஊழியர்களைப் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை நடப்பு சட்டமன்றக்கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டும்!@CMOTamilnadu @mkstalin

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்கள் தங்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற…

— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) April 15, 2025


Read Entire Article