
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள தனோரா கிராமத்தில் அரசு உதவி பெறும் உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 88 மாணவ, மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 35 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து மாணவர்கள் அனைவரும் பிஜப்பூர் மாவட்ட மருதுத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு இரண்டு மாணவிகளின் உடல்நிலை மோசமானதையடுத்து, அவர்கள் இருவரும் பஸ்தான் ஜக்தல்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஷிவானி தீலம் என்ற 3-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி பி.ஆர்.புஜாரி கூறுகையில், பள்ளியில் வழங்கப்பட்ட உணவால்தான் மாணவிகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது எனவும், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதே சமயம், மற்ற மாணவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.