* சென்னை, திருச்சி, கோவை என 10க்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கிறது
சென்னை: சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரர்களுக்கு ெசாந்தமான கட்டுமான நிறுவனம் மற்றும் வீடுகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி தில்லை நகர் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மறைந்த அவரது சகோதரர் ராமஜெயம் வீடும் உள்ளது. அதேபோல் அவரது சகோதரர்களான கே.என்.ரவிச்சந்திரன், கே.என்.மணிவண்ணன் ஆகியோர் வசிக்கின்றனர். இவர்கள் டிவிஎச் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே டிவிஎச் கட்டுமான நிறுவனம் முறையாக கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க வில்லை என்று கடந்த 2018ம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அப்போது பல கோடி ரூபாய் வருமானத்தை மறைத்தாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் டிவிஎச் கட்டுமான நிறுவனத்தில் பங்கு தாரர்களாக உள்ள கே.என்.ராவிச்சந்திரன், கே.என்.மணிவண்ணன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக திருச்சி தில்லை நகர் 5வது குறுக்கு தெருவில் வசித்து வரும் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் வீடு, அருகில் உள்ள மறைந்த கே.என்.ராமஜெயம் வீடு, சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் வீடு, திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள கே.என்.நேருவின் மகள் வீடு, கோவை மசக்காளிபாயத்தில் உள்ள இளைய சகோதரர் கே.என்.மணிவண்ணன் வீடு மற்றும் டிவிஎச் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் என சென்னை, கோவை, திருச்சி உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்தறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் ஆழ்வார்பேட்டையில் உள்ள நிறுவனம் மற்றும் மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள பிரகாஷ் என்பவரின் வீடு, அடையார் காந்தி நகர், ஆர்.ஏ.புரம் கிருஷ்ணாபுரி, சாஸ்திரி நகர் என 7 இடங்களில் காலை முதல் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இருந்தாலும், டிவிஎச் கட்டுமான நிறவனத்தின் வருமானம் தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்கு விபரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு ெசய்து வருகின்றனர். கே.என்.நேருவின் சகோதரர்கள் நடத்தும் இந்த கட்டுமான நிறுவனத்தில் அவரது மகனும் திருச்சி எம்பியுமான அருண் நேரு நடத்தும் நிறுவனமும் வர்த்தக தொடர்பாக முதலீடுகள் செய்துள்ளதால் அவரது வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
இந்த சோதனை முடிந்த பிறகு தான் முழுமையான தகவல்கள் தெரியும் என் கூறப்படுகிறது. இருந்தாலும் அமைச்சர் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் திருச்சியில் உள்ள வீட்டின் முன்பு குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சரின் மகன் மற்றும் சகோதரர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில்அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் அமைச்சர் கே.என்.நேரு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் கே.என்.நேருவின் மகன், சகோதரர்கள் வீடு, நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.