சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜ புதிய தலைவர் வரும் 26ம் தேதி அறிவிப்பு?

3 hours ago 1

சென்னை: தமிழக பாஜ தலைவர் குறித்து, வரும் 26ம் தேதி அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பாஜ கட்சியின் விதிமுறைப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேபோல் ஒருவருக்கு 2 முறை மாநில தலைவர் பதவி வழங்கலாம். அந்த வகையில், 2021ம் ஆண்டு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை தமிழக பாஜ மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவருடைய பதவிக் காலம் நிறைவடைய உள்ளது.

பாஜவின் உட்கட்சி தேர்தல் நடந்து பாஜ கிளை நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், 33 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள 34 மாவட்ட தலைவர்களும் புதிய மாநில தலைவர் அறிவிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வருகிற 26ம் தேதி குடியரசு தினத்தன்று தமிழக பாஜ தலைவர் அறிவிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் பதவிக்கான பட்டியலில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இவர்களில் ஒருவர் மாநில தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு வலிமையான தலைமையை தலைவர் பதவியில் அமர்த்த டெல்லி மேலிடம் டுடிவு செய்துள்ள கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் கடந்த முறை பாஜ தலைவர் அண்ணாமலை எடுத்த தவறான கூட்டணி முடிவால்தான் மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. எனவே, வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அவரை தலைவராக நியமித்தால் இந்த நிலைமைதான் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அண்ணாமலையை தவிர்த்து வேறு ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கட்சியில் சில மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜ புதிய தலைவர் வரும் 26ம் தேதி அறிவிப்பு? appeared first on Dinakaran.

Read Entire Article