
சென்னை,
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறை சார்பாகவும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். டாஸ்மாக் ஊழல் பின்னணியில் உள்ள #அந்த தியாகி யார் ? என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து பேரவை நிகழ்வுகளில் அதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பேச முயன்ற போது அனுமதி அளிக்கப்படாததால் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதோடு, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், பேரவையில் அதிமுகவினர் பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். சட்டப்பேரவைக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்தனர். தொடர்ந்து மக்கள் பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு வழங்கவில்லை என சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நல்லவேளை அதிமுகவினர் காவி உடையில் வராமல் கருப்பு சட்டையில் வந்துள்ளார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து ஆளும் கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? என அதிமுகவினர் முழக்கம் எழுப்பியபடியே அவையில் இருந்து வெளியேறினர்.
அதிமுக வெளியிடப்பு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,
அதிமுகதான் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி. ஆனால், எங்களை பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் வேறு கட்சித் தலைவரை பேச அழைத்தார்கள். நான் பேரவை தலைவரிடம் கோரிக்கை வைத்து சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சிக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் .
அதை தவிர்த்து மற்றொரு கட்சி தலைவருக்கு முதலில் வாய்ப்பு கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். மற்ற கட்சி தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனை இல்லை.
சபையின் மரபு ஜீரோ நேரத்தில் எதிர் கட்சிகளுக்கு தான் பேச வாய்ப்பு வேண்டும் என்று பேரவை தலைவர் எதிர்க்கட்சி வைக்கும் கோரிக்கையை நிராகரிக்கிறார்.
அவை முன்னவர் எதிர்க்கட்சிகளுக்கு நேரமில்லா நேரத்தை பொருத்தவரையில் எதிர்க்கட்சிகளுக்கு தான் பேச முன்னுரிமை அளிக்க வேண்டிய அவர்களுக்கு பேச அனுமதி அளிக்க வேண்டும் இன்று பேரவை தலைவரிடம் கூறிய பிறகு எங்களுக்கு பேச அனுமதி கிடைத்தது. பேரவை தலைவர் இது போன்று ஒரு தலைபட்சமாக செயலில் ஈடுபடுகிறார்.
கடந்த 2023ம் ஆண்டு இனி பேரவையில் உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினால் அதன் நேரலை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்.பி. உதயகுமார், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்டு வந்த பேசிய தனி தீர்மானத்தின் போது நேரலை துண்டிக்கப்பட்டது. ஆளும் கட்சியினை தோழர்களை கட்சியினர் கொண்டுவரும் தனி தீர்மானத்தை மட்டும் நேரலை செய்கின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கை சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம் என்று அறிவித்தது. அதைத்தான் நாங்கள் சுட்டிக் காட்டி கேட்கிறோம். ஆனால், இதுவரையில் அவர்கள் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற வில்லை. முதல்-அமைச்சர் எங்களை விமர்சனம் செய்வதை மட்டும் நேரடிகள் காட்டி அதை டி.வி.,யில் ஒளிபரப்பு செய்கிறார்கள்.
தாங்கள் மக்கள் பிரச்சினை குறித்து பேசுவது ஏன் ஒளிபரப்பு செய்யவில்லை. நாங்கள் ஆட்சியைப் பற்றி பேசினால் மக்கள் பிரச்சனையைப் பற்றி பேசினால் அதனை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறார் சபாநாயகர்.
எங்களை வெளியே அனுப்பிவிட்டு முதல்-அமைச்சர் பேசுகிறார். எங்களை பேச அனுமதி கொடுக்காமல் இவ்வாறு பேசுவது கோழைத்தனமானது. எங்களைப் பேச அனுமதி அளித்துவிட்டு அவர் பேசினால் அதற்கு ஏற்ப பதில் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது பிரதமர் இங்கு வரும்பொழுது கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தார்கள். தற்போது ஆளுங்கட்சியாக வந்த பிறகு வென் கொடை பிடிக்கிறார்கள். வென்கொடை வேந்தர் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டார்கள். அவர்கள் எந்த காலத்திலும் அவர்கள் கட்சி வளர்க்க மாட்டார்கள்.
எங்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. எங்கள் உரிமையை சட்டப்பேரவை தலைவர் பறிக்கிறார். மக்களுடைய பிரச்சினை பேசுவதற்கு சட்டமன்றத்திற்கு வருகிறோம். மக்கள் பிரச்சனையை பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வருவதற்கு எங்களுடைய கடமை.
அதற்கு பதில் சொல்வது அரசுடைய கடமை. ஆனால், அந்த நிகழ்வு சட்டமன்றத்தில் நடைபெறவில்லை. எங்களை திட்டமிட்டு பேசுவதற்கு அனுமதி கொடுக்காமல் வெளியேற்றிய பிறகு முதல்-அமைச்சர் எழுந்து பேச வைத்து சிறுமைப்படுத்த நினைக்கிறார்கள். எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்னும் 9 மாதங்கள்தான் திமுக-வின் ஆட்சிக்கான காலம்; அகம்பாவத்தில் ஆடுகிறார்கள். காவி உடை அணிந்து வரவில்லை என்று எங்களை விமர்சிக்கிறார். அவருக்கு பேச தகுதி உள்ளதா?
இவ்வாறு அவர் கூறினார்.