ராஞ்சி: ஜார்கண்ட்டில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரனின் தனிச் செயலாளர் உள்ளிட்ட சிலரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ேஹமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. சட்டவிரோத சுரங்க வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன.
சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச் செயல்களின் வாயிலாக 100 கோடி ரூபாய் ஆதாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் உட்பட 9 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. முதல்வர் ஹேமந்த் சோரனின் தனி செயலாளர் சுனில் ஸ்ரீவஸ்தவா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு ெசாந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘வருமான வரித்துறைக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட சுனில் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து சோதனை நடப்பதால், அது முடிந்த பின்னரே முழு விபரமும் தெரியவரும்’ என்றன. முன்னதாக, சட்டவிரோத சுரங்க வழக்கு தொடர்பாக ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.50 லட்சம் ரொக்கம், 1 கிலோ தங்கம், வெள்ளி மற்றும் 61 துப்பாக்கி தோட்டாக்களை சிபிஐ பறிமுதல் செய்தது.
தற்போது ஜார்கண்டில் சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரனின் தனி செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜார்கண்டில் வரும் 13ம் தேதி முதற்கட்டமாக 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாவது கட்டமாக வரும் 38 ெதாகுதிகளில் 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும். ஜார்கண்டில் எதிர்கட்சியாக உள்ள பாஜக, அம்மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பிரசார களத்தில் இறங்கியுள்ள நிலையில் தற்போது முதல்வரின் தனி செயலாளர் வீட்டில் ரெய்டு நடப்பது பரபரப்புபை ஏற்படுத்தி உள்ளது.
The post சட்டப் பேரவை தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் ஜார்கண்ட் முதல்வரின் தனி செயலாளர் வீட்டில் ரெய்டு appeared first on Dinakaran.