புதுடெல்லி: சட்ட ஆலோசனை வழங்கிய வக்கீல்களுக்கு விசாரணை அமைப்புகள் சம்மன் அனுப்பிய விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்துகிறது. குறிப்பிட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டவருக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வழக்கறிஞர்களை, சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் விசாரணைக்கு அழைக்கும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வந்தது. சமீபத்தில், மூத்த வழக்கறிஞர்களான அரவிந்த் தாதர், பிரதாப் வேணுகோபால் ஆகியோர் குறிப்பிட்ட சிலருக்கு சட்ட ஆலோசனை வழங்கியதால், அவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அந்த சம்மன்களைத் திரும்பப் பெற்றதுடன், இனிமேல் உயர் அதிகாரியின் அனுமதியின்றி வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்பக் கூடாது என புதிய சுற்றறிக்கையையும் வெளியிட்டது.
இதேபோல், குஜராத் காவல்துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்டவருக்காக ஆஜரான வழக்கறிஞர் ஒருவருக்கு சம்மன் அனுப்பிய வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு, ‘வழக்கறிஞர்களை விசாரணைக்கு அழைப்பது சட்டத்துறையின் சுதந்திரத்தைப் பாதித்து, நியாயமான நீதி நிர்வாகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்’ எனக் கவலை தெரிவித்து, அந்த சம்மனுக்குத் தடை விதித்ததுடன், இந்த விவகாரத்தை தலைமை நீதிபதியின் கவனத்திற்கும் கொண்டு சென்றது. இந்தச் சூழ்நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமானதாகக் கருதி, தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்துள்ளது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘வழக்குகளின் விசாரணையின்போது சட்ட ஆலோசனை வழங்கும் அல்லது கட்சிக்காரர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்களை சம்மன் அனுப்பி அழைப்பது மற்றும் அதுதொடர்பான சிக்கல்கள்’ என்ற தலைப்பில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு வரும் 14ம் தேதி விசாரிக்க உள்ளது. விசாரணை அமைப்புகளின் இத்தகைய நடவடிக்கைகள், வழக்கறிஞர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்குத் தடையாக இருப்பதாகக் கருதப்படும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவது, சட்டத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
The post சட்டத்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் சட்ட ஆலோசனை வழங்கிய வக்கீல்களுக்கு சம்மனா?.. அமலாக்கத்துறைக்கு சுப்ரீம்கோர்ட் கடிவாளம் appeared first on Dinakaran.